ADDED : ஆக 19, 2011 07:58 PM
உடுமலை: காகித ஆலை மோசடி வழக்கில், 'சன் டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர், உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது கோர்ட் காவலை, வரும் 30ம் தேதி வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன், தனது காகித ஆலையை மிரட்டிப் பறித்துக் கொண்டதாக அளித்த புகாரில், 'சன் டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆக.,3 ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இருவரும், ஆக.,5 ல் உடுமலை ஜே.எம்.1., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், இருவரின் ஜாமின் மனு விசாரணை ஆக., 9ல் நடந்தது; ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில், இன்றுடன் அவர்களது கோர்ட் காவல் முடிவடைந்ததால், ஜே.எம்.,1 (பொறுப்பு) மாஜிஸ்திரேட் ஷர்மிளா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 30ம் தேதி வரை, இருவரது காவலையும் நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சக்சேனா ஜாமின் வழங்கக் கோரி, மனுத் தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை, வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.