
ஒவ்வொரு மனிதனும் ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வழியில் சம்பாதித்த பொருளைக் கொண்டே சாப்பிட வேண்டும்.
''எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட, வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் உழைத்து சம்பாதித்த உணவையே உண்பார்களாய் இருந்தார்கள்,''என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். உழைப்பின் மூலம் பிச்சை எடுப்பது தடுக்கப்படுகிறது.
அல்லாஹ் தூயவன் என்பதால், நியாயமான வழியில் வரும் பொருட்களையே ஏற்றுக் கொள்கிறான். கொலை செய்தல், கொள்ளை அடித்தல் போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணித்தாலும், அதை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. குர்ஆனில் அல்லாஹ், ''தூதர்களே! தூய ஆகாரத்தையே புசித்து, நற்செயல் புரியுங்கள். நம்பிக்கை உடையவர்களே! நாம் உங்களுக்கு அருளிய ஹலாலான தூய ஆகாரத்தையே புசியுங்கள்,'' எனச் சொல்கிறான். ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு அழுக்கடைந்த ஆடைகளுடன் சிரமமான பயணம் மேற்கொண்டு, புண்ணியத்தலம் ஒன்றுக்கு வருகின்றான். ஆனால், அவன் சம்பாதித்த பணமோ ஹராமானது (தடுக்கப்பட்ட வழிகளில் சம்பாதித்தது) ஆகும். இவ்வாறு தன்னை வணங்குபவனின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்பதில்லை. அவன் எவ்வளவுதான் இறைவனிடம் இறைஞ்சிக் கேட்டாலும், அவனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே உழைப்பே உயர்ந்தது என்பது இன்றைய நமது சிந்தனையாகட்டும் .
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி