/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறப்பு ரயில்களிலும் கோவை புறக்கணிப்பு; கேரளாவுக்கு அதிக வாய்ப்புசிறப்பு ரயில்களிலும் கோவை புறக்கணிப்பு; கேரளாவுக்கு அதிக வாய்ப்பு
சிறப்பு ரயில்களிலும் கோவை புறக்கணிப்பு; கேரளாவுக்கு அதிக வாய்ப்பு
சிறப்பு ரயில்களிலும் கோவை புறக்கணிப்பு; கேரளாவுக்கு அதிக வாய்ப்பு
சிறப்பு ரயில்களிலும் கோவை புறக்கணிப்பு; கேரளாவுக்கு அதிக வாய்ப்பு
ADDED : செப் 01, 2011 01:55 AM
கோவை : சிறப்பு ரயில் என்ற பெயரில் பெங்களூருக்கு இயக்கப்படும் புதிய ரயிலும், கோவையைப் புறக்கணித்து எர்ணாகுளத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.கோவையைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், பெங்களூருவிலுள்ள ஐ.டி., நிறுவனங்களில் பணி புரிகின்றனர்.
கோவைக்கும், பெங்களூருவுக்கும் தொழில் மற்றும் வர்த்தகத் தொடர்புகளும், சமூகரீதியிலான தொடர்புகளும் அதிகம். அதனால், இங்கிருந்து தினமும் பல ஆயிரம் பேர், அங்கு செல்கின்றனர்; அங்கிருந்து அதே அளவில் இங்கு வருகின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டே, கடந்த 2001ல் பெங்களூருவுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2008லிருந்து இந்த ரயில், எர்ணாகுளம் வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு, பின்பு நிரந்தரமாக அங்கிருந்தே இயக்கப்படுகிறது. இதன் காரணமாக, கோவைக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளது.பெங்களூருவிலிருந்து கோவை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் யஷ்வந்த்பூர்-கண்ணனூர் ரயிலும் கோவை நகருக்குள் நிற்காமல் போத்தனூர் வழியாகச் செல்கிறது; ஆனால், அங்கும் நிறுத்தப்படுவதில்லை. யஷ்வந்த்பூரிலிருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்படும் ரயிலும், போத்தனூர் வழியாகச் செல்கிறது; கோவை ரயில்வே ஸ்டேஷன் வருவதில்லை.கோவையிலிருந்து பெங்களூருவுக்கு நேரடியாக இரவு நேர ரயில் இயக்கினால், பெரிதும் பயன் அளிப்பதோடு ரயில்வே துறைக்கும் பெரும் வருவாய் கிடைக்குமென்ற கோரிக்கையையும் வழக்கம் போல் ரயில்வே புறக்கணித்து வருகிறது. இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்குவதிலும் கேரளாவுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது.வரும் செப்.8லிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலைக் கூட, கோவையில் இருந்து இயக்க மறுப்பதிலிருந்தே ரயில்வே அதிகாரிகளின் பாரபட்சம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.இந்த சிறப்பு ரயில், கோவை வழியாகச் செல்வது ஒன்று மட்டுமே இங்குள்ள மக்களுக்குக் கிடைத்துள்ள தற்காலிக ஆறுதல். வெறும் 72 'பெர்த்' வசதிகளைக் கொண்ட இந்த ரயிலில், கோவையில் உள்ள மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்புதான். ஏனெனில், கேரளாவிலேயே ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம், பாலக்காடு ஆகிய நகரங்களைக் கடந்தே, கோவைக்கு இந்த ரயில் வருகிறது. சுருக்கமாய்ச் சொன்னால், கேரளாவுக்குப் போக எச்சத்தையே கொங்கு மண்டலத்துக்கு தருகிறது ரயில்வே துறை.இது இன்னொரு 'ஷாக்':கோவையிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை, போதிய வரவேற்பு இல்லை என்று காரணம் கூறி ரத்து செய்து விட்டது ரயில்வே துறை. அதேபோல, சனிக்கிழமைதோறும் இங்கிருந்து கரூர்-திருச்சி- காரைக்குடி-ராம்நாட் வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயிலும் வரும் அக்.8 உடன் நிறுத்தப்போவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை தென் மாவட்டப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ரயில் இது மட்டுமே. கோவையிலுள்ள தென் மாவட்ட மக்களின் நலன் கருதி, இதனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு 'ராக்' செயலர் ரவீந்திரன் கடிதம் எழுதியுள்ளார். என்ன பதில் கிடைக்கப்போகிறதோ?.