பாமாயில் ஊழல்: உம்மன் சாண்டி பங்கு என்ன? 3 மாதத்தில் அறிக்கை அளிக்க கோர்ட் உத்தரவு
பாமாயில் ஊழல்: உம்மன் சாண்டி பங்கு என்ன? 3 மாதத்தில் அறிக்கை அளிக்க கோர்ட் உத்தரவு
பாமாயில் ஊழல்: உம்மன் சாண்டி பங்கு என்ன? 3 மாதத்தில் அறிக்கை அளிக்க கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 09, 2011 12:36 AM
திருவனந்தபுரம் : கேரளாவில், பாமாயில் இறக்குமதியில் நடந்த ஊழலில், அப்போதைய நிதி அமைச்சராகவும், தற்போதைய முதல்வராகவும் உள்ள உம்மன் சாண்டியின் பங்கு என்ன? என, விஜிலன்ஸ் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில், 1992ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில், அக்கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன், முதல்வராக பதவி வகித்தார். நிதி அமைச்சராக தற்போதைய முதல்வர் உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில், அதே ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், சிங்கப்பூரிலிருந்து 15 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட வகையில், மாநில அரசுக்கு, 2.32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக, கருணாகரன், அப்போதைய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயலரும், முன்னாள் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கமிஷனருமான தாமஸ், உள்ளிட்ட எட்டுப் பேர் மீது, சி.பி.ஐ., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின், தாமஸ் தன் பதவியை இழந்தார். இந்தச் சூழலில், பாமாயில் இறக்குமதி நடந்த காலகட்டத்தில், நிதி அமைச்சராக இருந்த, தற்போதைய முதல்வர் உம்மன் சாண்டியின் பங்கு என்ன? என, சிறப்பு கோர்ட் நீதிபதி ஹனீபா கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக, விசாரணை நடத்தி நவம்பர் 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மேலும் விசாரிக்க தேவையில்லை என்ற, போலீசாரின் அறிக்கையையும் தள்ளுபடி செய்தார். கோர்ட் உத்தரவையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக, உம்மன் சாண்டி அறிவித்தார். இருப்பினும், முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், அதை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், பதவி விலகல் முடிவை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். பின், இது குறித்து நிருபர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, 'கோர்ட் உத்தரவை வரவேற்கிறேன்; எனது நிலையை கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துள்ள÷ன்' என்றார். இதற்கிடையே, உம்மன் சாண்டி பதவி விலகவேண்டும் என, எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணிக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதாலா, உம்மன் சாண்டி அப்பழுக்கற்றவர்; அவர் மீது, யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றார். பாமாயில் இறக்குமதியில், முதல்வரின் பங்கு என்ன என்பது குறித்து, கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


