ஓராண்டில் 1,305 வழக்குகள் பைசல் : கீழ்கோர்ட்களில் 11,701 வழக்குகளில் தீர்ப்பு
ஓராண்டில் 1,305 வழக்குகள் பைசல் : கீழ்கோர்ட்களில் 11,701 வழக்குகளில் தீர்ப்பு
ஓராண்டில் 1,305 வழக்குகள் பைசல் : கீழ்கோர்ட்களில் 11,701 வழக்குகளில் தீர்ப்பு

சீனியர் சிட்டிஷன் என அழைக்கப்படும் மூத்த குடிமகன்கள் தாக்கல் செய்த வழக்குகளில், கடந்த ஓராண்டில் மட்டும் 1,305 வழக்குகளை சென்னை ஐகோர்ட் பைசல் செய்துள்ளது.
மூத்த குடிமகன்களுக்கு பயணத்தில் சலுகை, டிபாசிட் தொகையில் அதிக வட்டி என அரசு சலுகைகளை அளிக்கிறது. வயதானவர்களுக்கு உதவும் நோக்கில் அரசும் பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல் ஐகோர்ட்டும், கீழ் கோர்ட்டுகளும், முதியோர்களின் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக ஒரு வழக்கு பைசல் ஆவதற்கு மாதக் கணக்கு, ஆண்டு கணக்குகள் ஆகிறது. வழக்குகள் மீது தீர்ப்பு வர ஏற்படும் கால தாமதத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வழக்கை தொடுத்தவர்கள் நடுத்தர, இளைய வயதினர் என்றால் அந்த வழக்கின் பலனை அவர்கள் எப்படியும் ஒருகட்டத்தில் அனுபவிக்கலாம். அதுவே முதியோராக இருந்தால், அந்த வழக்கின் முடிவு என்ன என்பது தெரியாமலே போய் விடுவதும் உண்டு.
ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் முன், மூத்த குடிமகன்களுக்காக என ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகன்கள், கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு பற்றிய விவரங்களை மனுவாக எழுதி, அந்தப் பெட்டியில் போடலாம். இந்தப் பெட்டியில் போடப்படும் மனுக்களை அவ்வப்போது பதிவுத் துறை எடுத்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புகிறது. முதியோரின் வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுக்கக் கோரி, ஐகோர்ட் பதிவாளர் (ஜுடிசியல்) அலுவலகத்திலும் நேரடியாக மனுக்களை அளிக்கின்றனர். வழக்கறிஞரின் கடிதத்துடன் இணைத்து, மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இந்த மனுக்களின் மீது பதிவுத் துறை நடவடிக்கை எடுத்து, முதியோர்களின் வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட அனுப்புகிறது. முதியோருக்கும் வழக்கின் பலன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில், அவர்களின் வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நடவடிக்கை எடுத்தார். முதல் கட்டமாக, ஐகோர்ட் மற்றும் கீழ் கோர்ட்டுகளில் முதியோர்கள் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலை வரவழைத்தார். முதியோர்களும், நிலுவையில் உள்ள தங்கள் வழக்கு விவரங்களை தெரிவிக்கலாம் என அறிவித்தார்.
அதன்படி, முதியோர்கள் தாக்கல் செய்த வழக்குகளின் பட்டியல் தலைமை நீதிபதிக்கு வந்தது. இந்த வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி, விசாரணையை விரைந்து முடித்து தீர்வு காண்பதற்கு வழி வகை செய்தார். மூத்த குடிமகன்களின் வழக்குகளை விசாரிப்பதற்கென நீதிபதி ஜோதிமணியை நியமித்தார். அவர் முன், மூத்த குடிமகன்களின் வழக்குகளை பட்டியலிட உத்தரவிட்டார். தற்போது, நீதிபதி பாஷா முன் மூத்த குடிமகன்களின் வழக்குகள் பட்டியலிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த ஜூலை 11ம் தேதி வரை, ஐகோர்ட்டில், மூத்த குடிமகன்களின் வழக்குகளில் 1,305 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஐகோர்ட் மட்டுமின்றி, கீழ் கோர்ட்டுகளிலும் மூத்த குடிமகன்களின் வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார்.
கீழ்கோர்ட்டுகளைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கடந்த மே மாதம் வரை 11 ஆயிரத்து 701 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. தங்கள் ஆயுள் முடிவதற்குள், வழக்கின் முடிவை பார்த்து விட வேண்டும் என மூத்த குடிமகன்கள் எதிர்பார்க்கின்றனர். மூத்த குடிமகன்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-


