ADDED : ஆக 03, 2011 09:55 PM
கடலூர் : ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடலூர் பெண்ணையாறு மற்றும் கடற்கரையில் புதுமண தம்பதிகள் இயற்கையை வழிபட்டனர்.
தமிழக பகுதிகளில் ஆடி பெருக்கு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். நேற்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு கடலூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரை மற்றும் பெண்ணையாற்றங்கரையில் கூடினர். அங்கு வாழை இலையில் அரிசி, வெல்லம், பொறி, அவல், பழங்களை வைத்து இயற்கையை வழிபட்டனர். பெண்கள் புதிய மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். சுமங்கலி பெண்கள் தாலிகளை புதிதாக மாற்றினர். இயற்கையை வழிபட்டு தங்கள் திருமண மாலைகளை புதுமண தம்பதிகள் நீரில் விட்டனர். பின்னர் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை ஆற்றங்கரையிலும் மற்றும் கடற்கரையிலும் அமர்ந்து குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனர்.