விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு
விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு
விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு
ADDED : செப் 27, 2011 06:27 PM
கோவை: 'விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னையை போக்க, குழுக்களாக இணைந்து விதைப்பண்ணை அமைத்து செயல்பட வேண்டும்' என, ஆலோசனை கூறப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் விதை கிராமத்திட்டத்தில் தரமான பயிறு விதைகள் உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி முகாமை, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் வசந்தரேகா துவக்கி வைத்து பேசியதாவது:
மனிதர்களுக்கு புரதச்சத்து அவசியம். இவை, பயறு வகை பயிர்களில் அதிகளவு உள்ளது. இவற்றை வேளாண்மை துறை 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு அளிக்கிறது. இதை, விவசாயிகள் பெற்று பயன் அடைய வேண்டும். தரமான பயறு விதைகள் உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி பெற்ற விவசாயிகள், ஒவ்வொருவரும் விதைப் பண்ணை அமைக்க முன் வரவேண்டும்.
வேளாண்மை பணியில் ஆள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. இவற்றை தீர்க்க, குழுக்களாக சேர்ந்து விதைப்பண்ணை அமைத்து, செயல்பட்டு பயிறு வகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை, சந்தை விலையை விட கூடுதலாக 25 ரூபாய் கொடுத்து, வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளப்படும். ஒரு ஹெக்டர் துவரை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும், என்றார். விதைச்சான்று உதவி இயக்குனர் மோகன்ராஜ், விதை பெறும் விபரம், ஆதார விதை நிலை 1 மற்றும் 2 பெறுதல், அதை கொண்டு சான்று விதை உற்பத்தி செய்தல் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோ பேசுகையில்,'' புரதச்சத்து நிறைந்த துவரை மற்றும் இதர பயறு வகை பயிர்களை தனிப்பயிராகவோ அல்லது ஊடு பயிராகவோ பயிரிட வேண்டும்'' என்றார். துணை வேளாண் அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார். முகாமில், வேளாண்மை அலுவலர் வசந்தி, டாக்டர் அம்பேத்கர் சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் மோகன், உதவி விதை அலுவலர் விஜயகோபால், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரமேசன், சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.