சேலம்: சேலம் மரவனேரி சாலை, குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது.
மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில், சாலை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் கூறுவர். ஆனால், அதற்கான பணிகள் துவங்கப்படாது. தற்போதைய, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் மரவனேவரி சாலையை சீரமைப்பது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். சாலையை சீரமைக்காதபட்சத்தில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி, உயிரிழக்க நேரிடும். அதிவேகத்தில் வரும் தனியார் பஸ்களால், சிதைந்து கிடக்கும் கற்கள் சிதறி, சாலையில் செல்வோரின் தலையை பதம் பார்க்கிறது. மரவனேரி சாலைக்கு மறுபிறப்பு உண்டா என பொதுமக்கள் மாநகராட்சியை கேள்வி கேட்கும் நிலை உள்ளது. மாநகராட்சி கமிஷனர் லட்சுமிபிரியா கூறுகையில்,'' மரவனேரி சாலை மோசமாகதான் உள்ளது. நானும் பார்த்தேன், விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுப்போம்,'' என, கூலாக பதிலளித்தார். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாது. தேர்தல் முடியும் வரை மாநகராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரச்னையை கவனத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.


