ADDED : ஆக 22, 2011 02:21 AM
உலகில் மண் வளமும் நீர் வளமும் இயற்கையின் படைப்பாக உள்ளது. இதை கெடுக்கும்
விதத்தில் மனிதர்கள்தான் செயல்பட்டு வருகின்றனர் என்று பார்த்தால்
மனிதனுக்கு போட்டியாக கருவேல மரங்களும் நீர் வளத்தை பெரிதும் பாழ்படுத்தி
வருகின்றன.தமிழகத்தில் நாட்டு கருவேலி மரங்கள் என்றும், வேலி கருவேலி
மரங்கள் என்றும் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டு கருவேலி மரங்கள்
நாட்டுக்கும், மனிதர்களுக்கும் நன்மை தரக்கூடியது.
நன்மை தரக்கூடிய நாட்டு
கருவேலி மரங்களை நீர் நிலைப்பிடிப்புள்ள பகுதிகளில் வனத்துறையினர் மூலம்
வளர்க்க அரசு தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஆனால் வேலி
கருவேலி மரங்கள் ஆறு, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது நீருடன்
பழைய துணிமணிகள், மக்காத குப்பை பொருட்கள் இந்த மரங்களில் தங்கி நீர்வரத்தை
தடுக்கும். பின் மண் தேங்கி மேடாகி மரமும் ஆறு, குளங்களை
ஆக்ரமித்துவிடும். மணல் பரப்புகளில் இந்த மரம் வளர்ந்தால் மணலில் உள்ள
ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.வறட்சி காலங்களில் ஆழமான பகுதிக்கு வேர்கள்
சென்றுவிடும். இலைகள் எப்போதும் பச்சைபசேல் என்று காணப்படும். விவசாய
தேவைக்கான நீரை வேகமாக உறிஞ்சி விடுவதால் விவசாய தேவைகளுக்கு போதிய நீர்
இல்லாமல் ஆறு, குளங்களில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிப்பு
ஏற்படும். அமெரிக்க நாட்டில் சமீபத்தில் நடந்த ஆய்வு மாநாட்டில் ஒரு
பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் மண்ணின் வில்லன் கருவேலி மரங்கள் என
கண்டறியப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வேலி
கருவேலி மரங்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் முன்வராததால் நெல்லை மாவட்டத்தின்
மேற்கு பகுதியில் மாறாந்தை, ஆலங்குளம், சுரண்டை, வீரகேரளம்புதூர்,
கழுநீர்குளம், அத்தியூத்து, பாவூர்சத்திரம், ஆயிரப்பேரி, பழைய குற்றாலம்,
செங்கோட்டை, தென்காசி பகுதியில் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கும் ஆறு,
குளம், பகுதிகளில் கருவேலி மரங்களின் ஆக்ரமிப்பால் மண் வளம் கெட்டு
வருகிறது.தரிசு நிலங்கள் மட்டுமின்றி ரோடுகளின் இருபுறங்களிலும் இந்த
விஷமரம் வளர்ந்து தனது ஆக்ரமிப்பை அகலப்படுத்தி வருகிறது. விஷ செடிகளாக
கருதப்படும் கருவேலி மரங்கள் ஒருபக்கம் ஆறு, குளங்களை ஆக்ரமிப்பு
செய்வதும், ஆகாய தாமரைகளும் தன் பங்குக்கு போட்டியாக ஆக்ரமிப்பு செய்து
வருவதால் இனிவரும் காலக்கட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான நீர்
கிடைக்காமல் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறினாலும்
ஆச்சர்யபடுவதற்கில்லை.கேரள மாநிலங்களில் உள்ள ஆறுகளில் இந்த விஷ செடிகள்
ஆக்ரமித்துவிடக்கூடாது என்பதற்காகவும், விவசாய நிலங்கள் போதிய நீரின்றி
பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேரள ஆறுகளில் மணல்
அள்ள தடை விதித்திருக்கின்றனர். அதேபோன்று தமிழ்நாட்டில் நீர் வளத்தை
பெருக்க வேண்டுமானால் ஆறு, ஏரி, குளங்களில் மணல் அள்ள தடை விதிக்க
வேண்டும்.புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், அலுவலகங்கள் மழைநீரை
சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். மரங்கள், செடி, கொடிகள் நடப்பட
வேண்டும். விஷ செடிகளை அகற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் எதிர்காலங்களில்
தமிழக பகுதியில் விவசாயம் செழிப்படையும். இல்லையேல் வறுமை, வறட்சி, பசி,
பட்டினி போன்ற நிலை உருவாகும். எதிர்கால நலன் கருதி தமிழகம் செழிப்படைய
நற்திட்டங்கள் தீட்டுவதும், நடைமுறைப்படுத்துவதும் அரசின் கைகளில் தான்
இருக்கிறது.அரசு இத்திட்டத்தை செயல்படுத்தினாலும் கடைபிடிக்க வேண்டியது
பொதுமக்கள் தான். விஷ செடிகளை அகற்றுவோம், மரம் வளர்ப்போம், மழைநீர் வளம்
பெறுவோம், வறுமையின்றி செழிப்புடன் வாழ்வோம்.
-கே.செல்லப்பெருமாள்-