
சென்னை : 'விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதில், அரசு பால் உற்பத்தி கூட்டுறவு சங்க அலுவலர்கள் மெத்தனப் போக்காக நடந்து கொண்டால், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அரசு பால் உற்பத்தி சங்க அலுவலர்களுக்கு, அரசு அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: கிராமங்களில் தோட்டம் தோட்டமாக சென்று, விவசாயிகளை நேரில் சந்தித்து, அரசு பால் கூட்டுறவு சங்கத்தில் பாலை ஊற்ற, 'கேன்வாஸ்' செய்ய வேண்டும். அரசு கூட்டுறவு பால் சங்கத்தில் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு, முறையாக பணப் பட்டுவாடா செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தவறு செய்யும் அலுவலர்கள் மீது நிர்வாக ரீதியாகவும், காவல் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், கடந்த இரண்டு மாதத்திற்கு முன், ஆவினுக்கு கிடைத்து வந்த, 20 லட்சம் லிட்டர் பால் வரத்து, 24 லட்சத்து, 40 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இது குறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், அரசு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சென்னையில் இருந்து தினமும் கண்காணிக்கப்படுகின்றன. ஆவினுக்கு பால் உற்பத்தி குறைந்தால், அன்றைய தினமே மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. இந்த நெருக்கடியால், ஆவினுக்கு பால் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அரசு கூட்டுறவு பால் சங்கத்தில் பால் ஊற்றும் விவசாயிகளின் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ வசதி, மானிய விலையில் மாட்டுத் தீவனம், பசும் புல் பயிரிட மானியம் ஆகிய சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
என்.செந்தில்