ADDED : செப் 21, 2011 01:30 AM
சென்னை : ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பைக் மீது, மற்றொரு பைக் மோதியதில், பலத்தக் காயமடைந்த போலீஸ்காரர், சிகிச்சை பலனின்றி, நேற்று பரிதாபமாக பலியானார்.
இவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில், குற்றப் பிரிவில் வெங்கடேசன் பணியாற்றினார். இவரும், செல்வராஜ் என்ற போலீஸ்காரரும், கடந்த வெள்ளியன்று இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பைக்கை வெங்கடேசன் ஓட்டிச் சென்றார். ஐஸ்அவுஸ் பகுதியில், பைக்கில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, எதிரே அயோத்தி குப்பத்தை சேர்ந்த ரவி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஓட்டி வந்த மற்றொரு பைக், போலீஸ்காரர் வந்த பைக் மீது வேகமாக மோதியது. இதில் வெங்கடேசன் தலையில், பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடேசனுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரது சகோதரர் நாகராஜ் மற்றும் உறவினர்கள், அவரை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இறந்து போன போலீஸ்காரர் வெங்கடேசன் குடும்பத்தாருக்கு, போலீஸ் கமிஷனர் திரிபாதி, 20 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கியுள்ளார்.