ADDED : செப் 10, 2011 02:05 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் அமையும் இடங்கள்
தேர்வு செய்யப்பட்டு, மண்டல அலுவலகங்கள், ஆவண காப்பகங்கள் மற்றும் வரி
வசூல் மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர்
மாநகராட்சியுடன் எட்டு ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகள் இணைக்கப்பட்டு, 60
வார்டுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய
எல்லைகளுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஏதுவாக, வார்டு வாரியான வாக்காளர்
பட்டியல் தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது.
கூடுதலான பகுதிகள் இணைக்கப்படுவதால், வரி எண் அடிப்படையில், தலா 15
வார்டுகளை உள்ளடக்கிய மண்டலங்கள் பிரிக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வை தொடர்ந்து, வேலம்பாளையம், நல்லூர் நகராட்சி
அலு வலகங்களும், தொட்டிபாளையம், முருகம்பாளையம் ஊராட்சி அலு
வலகங்களும், மண்டல அலுவலகங்களாக செயல்படும். நகராட்சி அலுவலகங்கள் போதுமான
வசதிகளுடன் உள்ளன.மீதியுள்ள ஊராட்சி அலுவலகங்கள் தற்போதைக்கு மண்டல
அலுவலகமாக பயன்படுத்தவும், விரைவில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டவும்
ஏற்பாடு நடந்து வருகிறது. தற்போதுள்ள இதர ஊராட்சி அலுவலகங்களை, வரி வசூல்
மையங்களாகவும், ஆவண காப்பகங்களாகவும் மாற்ற ஆலோசனை நடந்து
வருகிறது.மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள்,
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். நான்கு
மண்டல அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கும்போது, அந்தந்த 15
வார்டுகளுக்கான வளர்ச்சி பணிகளையும், சுகாதாரம் மற்றும் துப்புரவு
பணிகளையும் துணை கமிஷனர் தலைமை யிலான மண்டல அதிகாரிகள் மேற்கொள்வர்.