/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் 40 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் :உள்ளூர் திட்டக்குழுமம் "அதிரடி'கோவையில் 40 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் :உள்ளூர் திட்டக்குழுமம் "அதிரடி'
கோவையில் 40 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் :உள்ளூர் திட்டக்குழுமம் "அதிரடி'
கோவையில் 40 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் :உள்ளூர் திட்டக்குழுமம் "அதிரடி'
கோவையில் 40 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் :உள்ளூர் திட்டக்குழுமம் "அதிரடி'
ADDED : ஆக 11, 2011 11:44 PM
கோவை : கட்டட விதிமுறைக்கு புறம்பாக கோவையில் கட்டப்பட்டுள்ள 40 கல்லூரிகளுக்கு உள்ளூர் திட்டக்குழுமம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
30 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் நிலம் வாங்கி கல்லூரி கட்டுவது லாபம் தராது என்பதால், புறநகர் பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. 2,000 சதுர அடிக்கு மேல் உள்ள மனை மற்றும் வணிக கட்டடங்களுக்கும், 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கும் கோவையில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதி பெற வேண்டும். புறநகர் பகுதிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெரும்பாலான கல்லூரி கட்டடங்கள், ஊராட்சி நிர்வாகங்களிடம் மட்டுமே அனுமதி பெறுகின்றன. இவற்றில் சில கட்டடங்கள் மலையை ஒட்டி கட்டப்பட்டுள்ளன. மலையை ஒட்டியுள்ள வனத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், வன உயிரினங்களின் வழித்தடங்கள் மறைக்கப்படுகின்றன. இதனால், பாதை மாறும் புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. கோவையில் அனுமதி மீறி கட்டப்பட்டுள்ள, 40 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு உள்ளூர் திட்டக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்ளூர் திட்டக்குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''உள்ளூர் திட்டக் குழுமத்தின் அங்கீகாரம் பெறாத மனைகள், கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கோவையில், கட்டட அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 40 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் இக்கல்லூரிகள் பெற்றுள்ள அனுமதி செல்லாது. 30 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரியுள்ளோம். நோட்டீஸ் பெற்ற சில கல்லூரி நிர்வாகத்தினர், குறைகளை நிவர்த்தி செய்யவும் முறைப்படுத்தவும் முன் வந்துள்ளனர்,'' என்றார்.