ADDED : ஆக 03, 2011 01:31 AM
வால்பாறை : வால்பாறையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு காட்டேஜ்கள் செயல்படுத்த வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் சுற்றுலாப்பயணிகள் தங்கி செல்ல வசதியாக 50 க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வால்பாறை டவுன், சோலையார் அணை, ரொட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட எஸ்.பி.,உமா மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூட்டம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், உரிமம் இல்லாமல் தங்கும் விடுதிகளை(காட்டேஜ்) நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரி கண்டிப்பாக செலுத்த வேண்டும். காட்டேஜ்களில் தங்குபவர்களின் முழுமுகவரியை போலீஸ் ஸ்டேஷனில் உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தங்கும் போது அவர்களின் முழு முகவரியை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள், காட்டேஜ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


