/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு :8,000 ஏக்கர் பாசன வசதி பெறும்கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு :8,000 ஏக்கர் பாசன வசதி பெறும்
கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு :8,000 ஏக்கர் பாசன வசதி பெறும்
கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு :8,000 ஏக்கர் பாசன வசதி பெறும்
கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு :8,000 ஏக்கர் பாசன வசதி பெறும்
ADDED : ஜூலை 11, 2011 11:52 PM
ஓசூர்: ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று, பாசனத்திற்கு
கலெக்டர் தண்ணீர் திறந்தார். இதன் மூலம், 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள்
பாசன வசதி பெறுகிறது.
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கெலவரப்பள்ளி அணை உள்ளது. இந்த
அணையின் மொத்த நீர் மட்டம் 44 அடி. கர்நாடகா மாநிலம் 'நந்திஹில்ஸ்' மலையில்
உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதால்,
கெலவரப்பள்ளி அணை மூலம் விவசாயிகள் பாசனம் பெற்று வருகின்றனர்.
கடந்த மாதம் கர்நாடகாவில் பெய்த கனமழையால், தென்பெண்ணை ஆற்றில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கெலவரப்பள்ளி அணை நிரம்பியது. இதனால், 'அணையில்
இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என விவசாயிகள்
வலியுறுத்தினர்.
அதன்படி, கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர்
திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. பர்கூர் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி,
ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத் முன்னிலை வகித்தனர். கலெக்டர் மகேஸ்வரன்,
அணையின் இரு மதகுகளில் இருந்தும், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார்.
இதன் மூலம் ஓசூர், சூளகிரி, தொரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,
8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கலெக்டர் மகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது, அணையில், 41.16 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு, 100 கன அடி
தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து உபரி நீராக கே.ஆர்.பி., அணைக்கு, 160 கன
அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இடதுபுற கால்வாய் மற்றும் கிளை
கால்வாய்கள் வழியாக இன்று (நேற்று) முதல், 64 கன அடி தண்ணீரும், வலதுபுற
கால்வாய் வழியாக, 26 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இடது புற
கால்வாய் மூலம், 28 கி.மீ., தூரம் உள்ள, 5,918 ஏக்கர் விவசாய நிலமும்,
வலதுபுற கால்வாய் மூலம், 21.99 கி.மீ., தூரம் உள்ள, 2,082 ஏக்கர் விவசாய
நிலமும் பாசன வசதி பெறுகிறது.
விவசாயிகள் இந்த தண்ணீரை முறையாக பயன்படுத்தி, உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்
சுந்தரம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் நாகராஜ், அ.தி.மு.க., ஒன்றிய
செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சிட்டிஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.
அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., மிரட்டல் அணை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும்,
ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து,''எனக்கு
ஏன் அணை திறப்பு நேரம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. காலை
9.30 மணிக்கு என்ற கூறிவிட்டு, பகல் 12.30 மணிக்கு நிகழ்ச்சி
நடத்துகிறீர்கள். என்னை திட்டமிட்டு புறக்கணிக்கிறீர்கள். உங்கள் மீது,
நான் புகார் செய்தால் என்ன ஆகும் தெரியுமா? பிரச்னை வேண்டாம் என, அமைதியாக
இருக்கிறேன்,'' என்று சரமாரியாக டோஸ் விட்டார். உடனே, 'அமைச்சர் வருவதாக
இருந்தது; அதனால்தான் சரியாக நேரம் சொல்ல முடியவில்லை' என்று அதிகாரிகள்
சமாதானம் செய்தனர்.