சாம்பியன் பட்டம் வென்றார் டோகோவிச்
சாம்பியன் பட்டம் வென்றார் டோகோவிச்
சாம்பியன் பட்டம் வென்றார் டோகோவிச்
ADDED : செப் 13, 2011 11:54 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் டோகோவிச் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பைனலில் தோல்வி அடைந்து ஏமாற்றினார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலில், உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் நோவக் டோகோவிச், ஸ்பெயினின் ரபெல் நடாலை (நம்பர்-2) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான பைனலில் முதலிரண்டு செட்டை டோகோவிச் 6-2, 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட நடால், 'டை பிரேக்கர்' வரை நீடித்த மூன்றாவது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார். நான்காவது செட்டில் சுதாரித்துக் கொண்ட டோகோவிச் 6-1 என மிக எளிதாக கைப்பற்றினார். நான்கு மணி நேரம் 10நிமிடம் வரை நீடித்த பைனலின் முடிவில் டோகோவிச் 6-2, 6-4, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில்,
நடாலிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். தவிர இவர், இந்த ஆண்டு இதுவரை நடந்த ஏ.டி.பி., தொடரின் பைனலில், ஆறாவது முறையாக (பரிபாஸ் ஓபன், சோனி எரிக்சன் ஓபன், மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன்,
விம்பிள்டன், யு.எஸ்., ஓபன்) நடாலை வீழ்த்தியுள்ளார்.
நான்காவது பட்டம்: இது, டோகோவிச்சின் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். முன்னதாக இவர், ஆஸ்திரேலிய ஓபன் (2008, 2011), விம்பிள்டன் (2011) தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனில், அதிகபட்சமாக அரையிறுதி வரை மூன்று முறை (2007, 08, 11) முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஒரே ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 11வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதன்முதலில் கடந்த 1933ல், ஆஸ்திரேலியாவின் ஜாக் கிராவ்போர்டு இச்சாதனை படைத்தார். அதன்பின் இங்கிலாந்தின் பெர்ரி (1934), அமெரிக்காவின் டோனி டிராபர்ட் (1955), ஆஸ்திரேலியாவின் லீவ் ஹோடு (1956), ஆஷ்லே கூப்பர் (1958), ராய் எமர்சன் (1964), அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1974), சுவீடனின் மாட்ஸ் விலாண்டர் (1988), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (2004, 2006, 2007), ஸ்பெயினின் ரபெல் நடால் (2010) ஆகியோர் இச்சாதனை படைத்தனர்.