Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் ரூ.30 கோடி மதிப்பு மாநகராட்சி இடம் மீட்பு

திருச்சியில் ரூ.30 கோடி மதிப்பு மாநகராட்சி இடம் மீட்பு

திருச்சியில் ரூ.30 கோடி மதிப்பு மாநகராட்சி இடம் மீட்பு

திருச்சியில் ரூ.30 கோடி மதிப்பு மாநகராட்சி இடம் மீட்பு

ADDED : செப் 13, 2011 01:04 AM


Google News
திருச்சி: திருச்சி மாநகர கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் முன்னாள் அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. திருச்சி தென்னூர் உழவர் சந்தைக்கு பின்புறம் மக்கள் பயன்படுத்தும் வகையில், பூங்கா அமைக்க, அண்ணாநகர் வீட்டு வசதி சங்கத்தால், 25 ஆயிரத்து, 58 சதுர அடி நிலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தி, அப்படியே போட்டு வைத்திருந்தது. மேற்கண்ட இடத்தை ரவிச்சந்திரன் மனைவி குந்தவை பிராட்டி என்பவர் பெயரிலும், முத்து மகன் கருணாநிதி என்பவர் பெயரிலும் இருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். கடந்த 2008ம் ஆண்டு இது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அந்த இடத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பலமுறை கேட்டுக் கொண்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கியது. இதையடுத்து மாநகராட்சி இடத்தை காலி செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் காலி செய்ய எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நேற்று காலை அந்த இடத்துக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த மூன்று கண்டெய்னர்களை கிரேன் இயந்திரம் மூலம் தூக்கி, வெளியே வைத்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் கட்டியிருந்த சிறு குடிசையையும், இடத்தை சுற்றியிருந்த காம்பவுண்ட் சுவரையும் பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ், செயற்பொறியாளர் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். ''ஆக்ரமிப்பாளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. கைப்பற்றப்பட்ட இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படும்,'' என்று கமிஷனர் வீரராகவ ராவ் தெரிவித்தார். நீண்டகாலமாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்த, 30 கோடி ரூபாய் நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் கைப்பற்றியதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us