/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"ஆற்றின் சுத்தம் ஒரு நாட்டின் சுத்தம்'"ஆற்றின் சுத்தம் ஒரு நாட்டின் சுத்தம்'
"ஆற்றின் சுத்தம் ஒரு நாட்டின் சுத்தம்'
"ஆற்றின் சுத்தம் ஒரு நாட்டின் சுத்தம்'
"ஆற்றின் சுத்தம் ஒரு நாட்டின் சுத்தம்'
ADDED : செப் 01, 2011 01:52 AM
கோவை : ''சுற்றுச்சூழல் பற்றி பேசுபவர்களை எதிரியாக பார்த்தவர் கூட இன்றைக்கு, சூழலியலுக்கு ஆதரவாக பேசுகின்றனர், இது ஒரு நல்ல மாற்றம்'' என்று, இயற்கை வேளாண் விவசாயி செல்வம் பேசினார்.ஓசை சுற்றுச் சூழல் அமைப்பு சார்பில், இன்றைய சூழலியல் பிரச்னைகளுக்கு யார் காரணம் 'நீங்கள்தான்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கோவை சுற்றுச்சூழல் குழும கோட்ட செயற்பொறியாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தமிழ் நாடு இயற்கை வேளாண்மை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் பேசியதாவது:இன்றைய சூழலியல் பிரச்னைகளுக்கு யார் காரணம் 'நீங்கள்தான்' என்று நான் யாரையும் சுட்டிகாட்ட விரும்வில்லை. நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அதற்கு காரணமாக இருக்கிறோம் என்று பேசுவதுதான் சரியாக இருக்கும்.முன்பெல்லாம் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்பு என்னவென்று பலருக்கு தெரியாது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை, ஓரளவுக்கு அறிந்திருக்கிறோம். சுற்றுச் சூழல் பற்றி பேசுபவர்களை எதிரியாக பார்த்தவர்கள் கூட இப்போது சூழலியலுக்கு ஆதரவாக பேசுகின்றனர், இது ஒரு நல்ல மாற்றம். இருந்தும் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பல சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. நம்முடைய குளங்களும், ஆறுகளும் மாசு பட நாமே காரணமாக இருக்கிறோம், இந்த தவறுகள் தெரிந்தே நடக்கின்றன.இதை தடுக்க சட்டங்கள் இருக்கின்றன; ஆனால் அதை அமல்படுத்தும் அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.அரசு பாதுகாக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும். அதனால், இன்றைக்குள்ள பிரச்னையின் தீவிரத்தை புரிந்து கொண்டு நம்மை நாமே தயார் படுத்திக்கொண்டு களப்பணி செய்யவேண்டும். நம்மால் ஏற்படும் சிறிய மாற்றம் ஒரு பெரிய மாற்றத்திற்கான வழியை உருவாக்கும். உதாரணமாக விஸ்கோஸ் ஆலை கழிவுகள் பவானி ஆற்றில் கலந்த போது, ஆரம்பத்தில் அப்பிரச்னை அங்குள்ள பள்ளி மாணவர்கள்தான் எதிர்த்து போராடினார்கள். இச்சிறிய போராட்டம்தான் பெரிய போராட்டமாக மாறி, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் மூலம் நல்ல தீர்வு கிடைத்தது. எதையும் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கிறது, பொதுநலனில் அக்கறையுள்ள அமைப்புகள் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். காரணம் சூழலியல் பிரச்னை என்பது நமக்கும், நம் நாட்டுக்குமான பிரச்னை மட்டுமல்ல உலகத்துக்கான பிரச்சனையாக மாறி இருக்கிறது. ஆற்றையும், குளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள தெரியாத நம்மால், நாம் வாழும் இந்த நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாது. ஆற்றங்கரை நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம், ஆனால், நம்முடை ஆறுகள் அத்தனையும் அசுத்தமாகி கிடக்கிறது. ஆற்றின் சுத்தம்தான் ஒரு நாட்டின் சுத்தம். அதனால், ஓசை போன்ற அமைப்புக்கள் நொய்யலையும், அதை சுற்றியுள்ள குளங்களையும் மாசுபடாமல் பாதுகாக்கும் முயற்சியை செய்யவதோடு அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, செல்வம் பேசினார்.