PUBLISHED ON : ஜூலை 28, 2011 12:00 AM

'பழசு இப்போ பெருசு!' பழமை வாய்ந்த கேரளா முடி திருத்தகத்தின் உரிமையாளர் அரவிந்தாக்ஷன்: சென்னையில் உள்ள பழமையானவற்றில் ஒன்று, எங்கள் முடி திருத்தகம் கடை.
இந்தக் கடையை, என் அப்பா, 1939ல் தி.நகரில் தொடங்கினார். அவர் வாங்கிப் போட்ட பர்னிச்சர்களை, பழமை மாறாமல் பாதுகாப்பதும், தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என, அன்றிலிருந்து, இன்று வரை தொடரும் எங்கள் வாடிக்கையாளர்களும் தான், சலூனின் சொத்து.சென்னையில், பல பிரபலங்கள் எங்களிடம் தான் சிகை அலங்காரம் செய்ய வருவர். பத்திரிகையாளர் தமிழ்வாணன், நடிகர்கள் வி.கே.ராமசாமி, டணால் தங்கவேல், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர், காலமாகும் வரை எங்களிடம் தான் சிகை அலங்காரம் செய்து கொண்டனர்.நல்லி சில்க்ஸ் கடையின் உரிமையாளர் நல்லி குப்புசாமி செட்டியார், ரெசிடென்சி டவர்ஸ் உரிமையாளர் அப்பாசாமி, கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி, நாயுடு ஹால் வேணுகோபால் உள்ளிட்ட பல பிரபலங்கள், இன்று வரையிலும், எங்களிடம் தான் சிகை அலங்காரம் செய்து கொள்வர். நல்லி குப்புசாமி, தான் எழுதிய, 'தி நகர் அன்றும் இன்றும்' என்ற புத்தகத்தில், எங்கள் சலூன் பற்றி குறிப்பிட்டது எங்களுக்குப் பெருமை.இப்போதுள்ள ரோலிங் சேரின் தரம், நாலஞ்சு வருஷத்துக்கு கூட நிலைக்காது. ஆனால், எங்கள் கடையில் உள்ள நாற்காலிகள், 75 வருடங்களுக்கு முன், தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை. வார்னிஷ் செய்தால், 100 வருடங்கள் வரை தாங்கக் கூடியவை.சம்பளத்துக்கு வேலை செய்தாலும், கடையின் பர்னிச்சர்களை பாதுகாப்பதிலும், வாடிக்கையாளர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதிலும், எங்கள் ஊழியர்களின் உழைப்பு மிகப் பெரியது!