திருவான்மியூரில் ஏழாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்:மருத்துவமனையில் நான்கு பேர் அனுமதி
திருவான்மியூரில் ஏழாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்:மருத்துவமனையில் நான்கு பேர் அனுமதி
திருவான்மியூரில் ஏழாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்:மருத்துவமனையில் நான்கு பேர் அனுமதி
ADDED : ஆக 23, 2011 04:53 AM
சென்னை:வலுவான ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், சென்னை திருவான்மியூரில், கடந்த ஏழு நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில், நான்கு பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
ஊழலை ஒழிக்க, வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், திருவான்மியூரில் கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழாவது நாளாக தொடரும் இப்போராட்டத்தில், இரண்டு பெண்கள் உட்பட, மொத்தம், 24 பேர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் தினசரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏழு நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த மோகன் விஜயகுமார்,49, தருண்குமார் ஷர்மா, 23, புஷ்பேந்திர சிங், 23, மற்றும் சஞ்சய், 28, ஆகிய நான்கு பேருக்கு, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலர், உடல் சோர்வு காரணமாக, மயக்க நிலையில் போராட்டத்தை தொடர்கின்றனர். மருத்துவர்கள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு: திருவான்மியூரில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, துரைப்பாக்கம் எம்.என்.எம்., ஜெயின் கல்லூரியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று கலந்து கொண்டனர்.ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.