அரசியல் ஆதாயத்துக்காக தெலுங்கானா விவகாரம் பூதாகரம்
அரசியல் ஆதாயத்துக்காக தெலுங்கானா விவகாரம் பூதாகரம்
அரசியல் ஆதாயத்துக்காக தெலுங்கானா விவகாரம் பூதாகரம்

ஐதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க கோரும் போராட்டம் நாளுக்கு நாள் ஆந்திராவில் தீவிரமடைந்து வருகிறது.
ஆந்திராவை பிரித்து ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி தெலுங்கானாவை உருவாக்க வேண்டும், என்ற கோரிக்கை சில ஆண்டுகளாக வலுத்து வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி உள்ளிட்ட கட்சிகள் தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவுடன் இணைந்து கடந்த மாதம் 13ம்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக பாதங்களை ஆராய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தது மத்திய அரசு. தெலுங்கானா மாநிலத்தால் பாதகமான சூழல்கள் அதிகம் உள்ளன,என கிருஷ்ணா கமிஷன் அறிக்கை அளித்ததால் இந்த நடவடிக்கையை கிடப்பில் போட்டது மத்திய அரசு. அரசின் இந்த மெத்தன போக்கை கண்டித்து தெலுங்கானா பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் எல்லாம் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்படவில்லை.
'ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தான் தனி தெலுங்கானா சாத்தியமாகும். இதற்கு பல சுற்று பேச்சு நடத்த வேண்டியுள்ளது' என, ஆந்திர மாநில விவகாரங்களை கவனிக்கும் காங்கிரஸ் மேலிடப்பார்வையாளரும் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகர் சிரஞ்சீவி மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவை இரண்டாக பிரிப்பதை எதிர்க்கின்றனர்.
தெலுங்கானா பிரச்னையை அரசியல் கட்சிகள் ஏன் பூதாகரமாக்குகின்றன, என்ற ரகசியம் குறித்து பிரபல அரசியல் வல்லுநர் டி.ரவி குறிப்பிடுகையில், 'தனி தெலுங்கானா உருவானால் அந்த மாநிலத்தின் முதல்வர் பதவியை பிடிப்பதற்கு தான் அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தை பெரிது படுத்தி வருகின்றன' என தெரிவித்துள்ளார்.
தனி தெலுங்கானா போராட்டத்தை சந்திரசேகர ராவ் முன்னின்று நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக அவரது மகனும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி எம்.எல்.ஏ.வுமான ராமராவும், சகோதரர் மகன் ஹரிஷ் ராவும் உள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் தனி தெலுங்கானாவின் பிரபல தலைவர்களாக இந்த இளைஞர்கள் இருவரும் உருவகப்படுத்தப்பட்டு வருகின்றனர். ராமராவுக்கு சரளமாக ஆங்கில பேசும் தன்மை இருப்பதால் அனைத்து ஊடகங்களையும் அழைத்து தெலுங்கானா பிரசாரத்தை தெளிவாக செய்து வருகிறார்.
இந்த போராட்டத்தின் மூலம் ஆந்திராவில் தங்கள் செல்வாக்கை உயர்த்தி கொள்ள பாரதிய ஜனதா கட்சி முழு மூச்சாக இறங்கியுள்ளது. மாநில பா.ஜ.,தலைவர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, வித்யாசாகர் ராவ், இந்திரசேனா ரெட்டி ஆகியோரும் தெலுங்கானா போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பகிரங்கமாக பலர் போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஜனா ரெட்டி போன்றவர்கள் தெலுங்கானாவை ஆதரிக்கத்தான் செய்கின்றனர். தனி தெலுங்கானா உருவானால் 'நான் தான் முதல்வர்' என்ற அறிவிப்பையும் வெளியிட்டவர் தான் இந்த ஜனாரெட்டி. தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து அமைச்சரவையிலிருந்து கோமதி ரெட்டியும், வெங்கட் ரெட்டியும் சமீபத்தில் விலகியுள்ளனர்.
தனி தெலுங்கானா மாநிலம் உருவானால் அந்த மாநிலத்தின் தங்கள் பலத்தை காட்ட வேண்டும், என்பதற்காகவே பெரும்பாலான கட்சிகள் இந்த போராட்டத்தை ஆதரித்து வருகின்றன. இந்த போராட்டத்தில் சில கட்சி தøலைவர்களிடையே போட்டியும் ஏற்பட்டுள்ளது. எனவே, தான் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


