Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"டாஸ்மாக்' சரக்கு விற்பனை சரிவு : தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு

"டாஸ்மாக்' சரக்கு விற்பனை சரிவு : தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு

"டாஸ்மாக்' சரக்கு விற்பனை சரிவு : தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு

"டாஸ்மாக்' சரக்கு விற்பனை சரிவு : தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு

ADDED : அக் 01, 2011 12:54 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை, கோவை மண்டலங்களில், 'டாஸ்மாக்' சரக்கு விற்பனையில், சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு, 'டாஸ்மாக் பார்'களில், அண்டை மாநில சரக்குகள் விற்கப்படுவது காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 'டாஸ்மாக்' கடைகளில், அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கான மது சப்ளை, அந்த மண்டல குடோன்களில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இரு மண்டலங்கள் என, செயல்பட்டு வருகின்றன.

'டாஸ்மாக்' துவக்கப்பட்டதிலிருந்து, சரக்குகளின் விற்பனை ஆண்டுதோறும், சராசரியாக 17 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. தற்போது, முதல் முறையாக சரக்குகள் விற்பனை, 12 சதவீதமாகக் குறைந்துள்ளது, சமீபத்தில், மண்டலவாரியாக நடந்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இதற்கு, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மற்றும் ஈரோடு, திருப்பூர், உதகை, கோவை மாவட்டங்களைக் கொண்ட கோவை மண்டலம் ஆகியவற்றில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், சரக்கு விற்பனை குறைந்தது காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறும் போது, ''இதே காலத்தில், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட, 'ஹாட்' வகை மதுபானங்களின் விற்பனை, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவில், 6 லட்சம் மற்றும் 3 லட்சம் பெட்டிகள் வரை அதிகரித்துள்ளது. சென்னை, கோவை மண்டலங்களில், 'டாஸ்மாக்' சரக்கு விற்பனை குறைந்ததற்கு, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்படும் சரக்கு, 'டாஸ்மாக் பார்'களில் விற்கப்படுவது முக்கிய காரணம்'' என்றார்.

சென்னை மண்டல 'டாஸ்மாக்' நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மற்ற மண்டலங்களை ஒப்பிடும்போது, சென்னை மற்றும் கோவை மண்டலங்களில், 'கிளப்'கள், நட்சத்திர ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், இவ்விரு மண்டலங்களில் சரக்குகள் விற்பனை குறைந்திருக்கலாம். அனைத்து வகையான சரக்குகளும், 'டாஸ்மாக்' கடைகளில் கிடைப்பதால், வெளி மாநில சரக்குகளை 'டாஸ்மாக் பார்'களில் விற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக, யாராவது புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அதிரடி சோதனை : மதுபான பாட்டில்கள் விலையை, குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் என்ற வீதத்தில் உயர்த்திய பின், அரசுக்கு வர வேண்டிய விற்பனை வரி, ஆயத்தீர்வை போன்றவை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இவை குறைந்ததால், ஏதோ முறைகேடு நடப்பதாக அரசுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, 'டாஸ்மாக்' கடைகளில் இரண்டு நாட்களாக, பறக்கும் படையால், தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில், சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்திற்கு, 15 பறக்கும் படை என, ஆறு மண்டலங்களுக்கு பறக்கும் படையினர் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பறக்கும் படையில், ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

சோதனையின் போது, கடைக்கு சரக்கு வந்த தேதி, கடையின் இருப்பு சரக்கு, விற்பனையான சரக்கு, அதற்கான பணம் சரியாக உள்ளதா என கணக்கிடப்படுகிறது. அது மட்டுமன்றி, 'பார்'களில் போதிய வசதி செய்யப்பட்டுள்ளதா, பாருக்கான குறுமத் தொகை முறையாக செலுத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகிறன.

இந்த ஆய்வில், பெரியளவில் தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது குறித்து மாவட்ட, மண்டல மேலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. சிறிய அளவிலான குறைகள், ஆய்வு அறிக்கையாகத் தயார் செய்து, உடனுக்குடன் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us