/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மக்களுக்கு திண்டாட்டம்; பங்க் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்மக்களுக்கு திண்டாட்டம்; பங்க் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு திண்டாட்டம்; பங்க் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு திண்டாட்டம்; பங்க் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு திண்டாட்டம்; பங்க் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம்
ADDED : செப் 26, 2011 10:45 PM
கோவை : பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம், பங்க்களில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 'பெட்ரோல் ஸ்டாக் இல்லை' என கூறுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.'சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண் ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொள்ளலாம்' என, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், 2010 ஜூன் 26ல் அனுமதி வழங்கியது.விலை உயர்வுக்கு முன், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் 67.32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், கடந்த 16ம் தேதி முதல் ரூ.3.34 உயர்த்தப்பட்டது; தற்போது 70.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விலை உயர்வு கடந்த 16ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் கோவையில் கடந்த 15ம் தேதி இரவு பெட்ரோல் பங்க்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.கோவை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் 'அவுட்லெட்ஸ்' விபரம்: பாரத் பெட்ரோலியம்(96), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(130 முதல் 135), இந்துஸ்தான் பெட்ரோலியம்(60 முதல் 65), எஸ்ஸார், ரிலையன்ஸ்(6). நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் பங்க்களில் கடந்த 15ம் தேதி மாலை முதலே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களிடம் பெட்ரோல் 'ஸ்டாக் இல்லை' என கூறி மக்களை திருப்பி அனுப்பினர். 75 சதவீத பங்க்களில் இதே நிலை காணப்பட்டது. பெட்ரோல்பங்க் உரிமையாளர்களின் இந்த போக்கு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.ஒவ்வொரு பங்க்கிலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் ஸ்டாக் இருக்கும். விலை உயர்வு மறுநாள் தான் அமலுக்கு வருகிறது. எனவே, முதல் நாள் இரவு விற்பனை செய்யும் பெட்ரோலுக்கு ரூ.3.34 குறைவாகத்தான் கிடைக்கும். எனவே, பெட்ரோல் பங்க்களுக்கு இரவில் வரும் வாடிக்கையாளர்களிடம்'ஸ்டாக் இல்லை' என்று கூறி விட்டால், இருக்கும் ஸ்டாக் முழுவதற்கும், லிட்டருக்கு ரூ.3.34 கூடுதலாக கிடைக்கும். அப்படி கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிட்டுத்தான், பெரும்பாலான பங்க் உரிமையாளர்கள் அனைவரும் முதல் நாள் இரவு ஸ்டாக் இல்லை என்று மூடி விட்டனர். ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயர்த்தும்போதும், இதேபோன்று தான் நடக்கிறது. இத்தகைய பிரச்னைக்கு, முடிவு கட்டும் விதமாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் ஒன்றுபட்ட கருத்தாகும்.இது குறித்து, கோவை மாவட்ட பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்க தலைவர் செல்வராஜ் வேலுசாமி கூறுகையில் ''நகரில் செயல்படும் பல பெட்ரோல் பங்க்களில் கடந்த 15ம் தேதி இரவு 'ஸ்டாக் இல்லை' என கூறி மக்களை ஏமாற்றியுள்ள செய்தி வருத்தமளிக்கிறது. பெட்ரோல் பங்க் டீலர் பணி என்பது 50 சதவீதம் சேவை; 50 சதவீதம் பணம் சம்பாதிப்பது என்ற அடிப்படையில் அமைந்தது. இரண்டிலும் சிறிய வேறுபாடு ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படும். பங்க், பேங்க் என்ற இரண்டிலும் ஒரு எழுத்து தான் மாறியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு செயல்பாடும் ஏற்றுக்கொள்ளமுடியாது,'' என்றார்.கோவை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர பாண்டியன் கூறுகையில் ''பெட்ரோல் விலை உயர்வையொட்டி முந்தைய நாள் இரவு பங்க்களில் 'ஸ்டாக் இல்லை' என கூறி வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாக எங்களுக்கு இதுவரை புகார் வரவில்லை. பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவித்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ''மக்கள் நலன் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.பெட்ரோல் விலை உயர்வையொட்டி முந்தைய நாள் இரவு பங்க்களில் காணப்படும் இதுபோன்ற பிரச்னைகள் மற்றும் பெட்ரோல் வைத்து கொண்டே அடிக்கடி 'ஸ்டாக் இல்லை' என கூறி செயற்கையான முறையில் தட்டுபாடு ஏற்படுத்தும் பங்க்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 0422- 230 1114 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.