மதுரையில் "குதிரை ரேஸ்' சூதாட்டம்: 6 பேர் கைது
மதுரையில் "குதிரை ரேஸ்' சூதாட்டம்: 6 பேர் கைது
மதுரையில் "குதிரை ரேஸ்' சூதாட்டம்: 6 பேர் கைது
ADDED : செப் 26, 2011 10:28 PM
மதுரை: மதுரையில், குதிரை ரேஸ் நடப்பதாக கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, ரூ.4640ஐ பறிமுதல் செய்தனர்.
மதுரை மேலஹனுமந்தராயர் தெருவில், ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சோதனை நடந்தது. மதுரை தெற்குமாசிவீதி பாலன், 75, பொன்னகரம் மூர்த்தி, 62, காமராஜர்புரம் ஜெயபால், 66, காக்கா தோப்புத் தெரு சுப்புராம், 55, லட்சுமிபுரம் ஆத்மரங்கன், 72, பெருமாள் தெப்பம் பாலசந்திரன், 42, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் குதிரை ரேஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மதுரை புதூர் லூர்துநகரைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டவர். சென்னை கிண்டி, கொல்கட்டா, ஐதராபாத்தில் குதிரை ரேஸ் நடப்பதாக கூறி, 'குதிரை' ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலித்துள்ளார். இதற்கு அடையாளமாக துண்டுச்சீட்டில் 'குதிரை நம்பர்' மற்றும் பணம் செலுத்தியவரின் பெயரை எழுதி அவரே வைத்துக்கொள்வார். சிலர் ஒரு குதிரை மீது பல நூறு ரூபாய்களை செலுத்தியுள்ளனர். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை 'ஒன்பதாம் நம்பர் குதிரை ஜெயித்துவிட்டது' என்றுக்கூறி, சில நூறு ரூபாயை பரிசுத்தொகையாக தந்து, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இவரது கூட்டாளிகள் பாலன், மூர்த்தி ஆகியோர் மேலஹனுமந்தராயர் தெருவில் 'கிளையை' துவங்கி நடத்தியபோதுதான் போலீசில் பிடிபட்டனர். இவ்வழக்கில் தலைமறைவான ராமநாதனை தேடி வருகின்றனர். இந்த கும்பல் வேறு எங்கேயும் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடக்கிறது.