Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பால் அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பால் அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பால் அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பால் அதிருப்தி

ADDED : செப் 25, 2011 11:09 PM


Google News
கடலூர்:உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்களால் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி அறிவித்தது.அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்பின் முக்கிய பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

அதில், மாவட்டத்தில் உள்ள கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் நகராட்சிகளின் பதவிகளுக்கு முறையே அ.தி.மு.க., சார்பில் குமரன் (எ) குமார், சுகுமார், பன்னீர்செல்வம், அரங்கநாதன், நிர்மலாவும், தி.மு.க.,வில் ராஜா, புகழேந்தி, ஆனந்தி, தட்சணாமூர்த்தி, லலிதா (எ) ஜெயலலிதா, தே.மு.தி.க.,வில் சண்முகம், கவிதா, அறிவொளி, ஆனந்தகோபால், மங்கையர்கரசி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளன.இருப்பினும் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது.இந்நிலையில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகளில் அறிவித்துள்ள வேட்பாளர்கள் அறிவிப்பினால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே அ.தி.மு.க.,வில் கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குமரன் என்கிற குமாரை ஒரே இரவில் அதிரடியாக கட்சி தலைமை நீக்கிவிட்டு தொகுதி செயலர் சுப்ரமணியனை நியமித்திருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதேபோன்று நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் பொது தொகுதியாக இருந்ததை ஆதிதிராவிடர் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் அ.தி.மு.க., மீது அப்பகுதி மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரியில் வசித்து வரும் சுகுமாரை வேட்பாளராக அறிவித்திருப்பதால் அ.தி.மு.க.,வினர் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

கட்டப்பஞ்சாயத்து வழக்குகளில் தொடர்புடைய பன்னீர்செல்வத்தை பண்ருட்டிக்கும், சிதம்பரத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் போக்குவரத்து போலீஸ்காரரைத் தாக்கிய நகர செயலர் தோப்பு சுந்தரின் மனைவி நிர்மலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் வேட்பாளரை மாற்றக்கோரி கட்சி தலைமைக்கு மனு அனுப்பி வருகின்றனர்.தி.மு.க.,வில் சீனியர்கள் பலர் உள்ள நிலையில் மாவட்டச் செயலரின் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக கடலூருக்கு ராஜாவும், பண்ருட்டியில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தி.மு.க.,விற்கு வந்த ஆனந்தியையும், சிதம்பரத்திற்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளரின் மனைவி லலிதா (எ) ஜெயலலிதாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதேப்போன்று நெல்லிக்குப்பத்திற்கு கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளின் நேரடி தொடர்பும் ஆதரவும் உள்ளதால் உள்ளூர் நிர்வாகிகளை மதிக்காத புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியினரிடையே சலசலப்பு உள்ளது.தி.மு.க.,விலும் வேட்பாளர் அறிவிப்பில் முரண்பாடு இருப்பதால் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க., - அ.தி.மு.க., வில் வேட்பாளர்கள் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்காமலே உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us