பட்டப் பகலில் கொள்ளை முயற்சி: சுற்றி வளைத்த டிராபிக் போலீசார்
பட்டப் பகலில் கொள்ளை முயற்சி: சுற்றி வளைத்த டிராபிக் போலீசார்
பட்டப் பகலில் கொள்ளை முயற்சி: சுற்றி வளைத்த டிராபிக் போலீசார்
ADDED : செப் 23, 2011 11:58 PM

சென்னை: சென்ட்ரல் அருகே நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்க நடந்த முயற்சியை, டிராபிக் போலீசார் தடுத்து நிறுத்தி, கொள்ளையனையும் மடக்கிப் பிடித்தனர்.
நகைக் கடையில் வேலை செய்யும் ஒருவன், நேற்று திருநின்றவூரில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு 40 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில் எடுத்துக் கொண்டு, மதியம் ஒரு மணி அளவில் ரயிலில் வந்திறங்கினான்.
அவனுக்குத் தெரியாமல், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவன், அவனைப் பின் தொடர்ந்து வந்தான். ரயிலில் இறங்கி, வால்டாக்ஸ் சாலையில் நகை மற்றும் பணப்பையுடன் சென்ற போது, கொள்ளையன் பையைப் பிடுங்கிச் சென்றான். பையைப் பறிகொடுத்தவன், 'திருடன், திருடன்' என கத்தினான். சத்தத்தைக் கேட்டு, அங்கு போக்குவரத்து ஒழுங்குப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், ஜான்சன் மற்றும் போக்குவரத்து போலீஸ்காரர் இருதயராஜ் ஆகியோர், கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட கொள்ளையன் கையில், மிளகாய்ப் பொடி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தான். கொள்ளையன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில், தங்கம் மற்றும் பணப்பையைக் கொண்டு வந்தவனை, அவனுடன் வேலை பார்த்த ஆசாமி ஒருவனே கண்காணித்து, கொள்ளையடிப்பதற்கு ஆளை அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் மூவரைப் பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.