ADDED : செப் 20, 2011 11:44 PM
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், கூட்டணி குறித்து அவசரப்பட வேண்டாம் என்ற ரீதியில், 'அடக்கி வாசிக்கும்' கட்சித் தலைமைகள், எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கும் நிலையில், தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளன. தே.மு.தி.க., மகளிர் அணியினர், ரிசர்வ் பகுதிகள் என எதையும் அலட்சியமாக விட்டு விடாமல், விருப்ப மனுக்களை தாக்கல் செய்து, உஷார் நிலையில் உள்ளனர். ஒரே வார்டில், பல பேர் மனு செய்கின்றனர்.
உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியின் 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, 56 பேரும், தலைவர் பதவிக்கு 7 பேரும், மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்நிலை காணப்படுகிறது. எதிர்க்கட்சியாக வளர்ந்து விட்ட நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் பலத்தை தனித்து நிரூபித்தால், அடுத்த சட்டசபை தேர்தலில், எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம், தே.மு.தி.க.,வினரிடையே அதிகரித்துள்ளது.