Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகர அ.தி.மு.க., பிரமுகர்கள் திடீரென ஷாக்

சேலம் மாநகர அ.தி.மு.க., பிரமுகர்கள் திடீரென ஷாக்

சேலம் மாநகர அ.தி.மு.க., பிரமுகர்கள் திடீரென ஷாக்

சேலம் மாநகர அ.தி.மு.க., பிரமுகர்கள் திடீரென ஷாக்

ADDED : செப் 17, 2011 03:17 AM


Google News
சேலம்: சேலம் அ.தி.மு.க., சார்பில், மேயர் வேட்பாளராக, திடீரென்று சவுண்டப்பன் அறிவிக்கப்பட்டுள்ளது, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2001 ல் சேலம் மாநகராட்சி மேயராக, அ.தி.மு.க., வை சேர்ந்த சுரேஷ்குமார் பொறுப்பு வகித்தார். துணை மேயராக, 58 வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சவுண்டப்பன் தேர்வு செய்யப்பட்டார். 2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சுரேஷ்குமார், மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 2006 மார்ச் 28 ம் தேதி முதல் அக்., 24 ம் தேதி வரை, சவுண்டப்பன் மேயர்(பொறுப்பு) வகித்தார். இரண்டு முறை கவுன்சிலராக பொறுப்பு வகித்த சவுண்டப்பன் வெற்றி பெற்ற, 58 வது வார்டு, பெண்கள் வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் போட்டியிட மனைவி சீதாலட்சுமிக்கு, 'சீட்' வாங்கினார். தற்போது சீதாலட்சுமி கவுன்சிலராக இருக்கிறார்.கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க., சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. ஏற்கனவே, கவுன்சிலர், துணைமேயர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்த சவுண்டப்பன், மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்ப மனுவை வழங்கினார்.

மேலும், முன்னாள், அ.தி.மு.க., மேயர் சுரேஷ்குமார் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட, 63 பேர், சேலம் மேயர் தேர்தலில் களம் இறங்க விருப்ப மனுக்களை வழங்கினர். சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க., தலைமை, விருப்ப மனுக்களை பரிசீலனை செய்தது.கடந்த முறை சேலம் மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் கூட்டணி கட்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் திடீரென்று, நேற்று சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., மேயர் வேட்பாளராக சவுண்டப்பன் அறிவிக்கப்பட்டார்.கட்சி தலைமையின் இந்த திடீர் அறிவிப்பால், சேலம் மாநகர அ.தி.மு.க., வில் மேயர் சீட்டுக்காக, வி.ஐ.பி.,க்கள் மூலம் காய் நகர்த்தி வந்த, அ.தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாநகர், மாவட்ட செயலாளர் செல்வராஜின் ஆதரவு பெற்றவர் சவுண்டப்பன்.

எனவே, செல்வராஜுக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க., கோஷ்டியினர் மற்றும் அதிருப்தியாளர்கள், மேயர் தேர்தலில், சவுண்டப்பனுக்கு எதிராக திசை திரும்பலாம் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சூரமங்கலம், அஸ்தம்பட்டி ஆகிய மண்டலங்களில் சவுண்டப்பனுக்கு ஆதரவு கரம் நீட்டுவதற்கு ஆட்கள் இல்லை. கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை மண்டலங்களில் மட்டும் ஒரு சில அ.தி.மு.க., நிர்வாகிகள், சவுண்டப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், உற்சாகம் அடைந்துள்ளனர்.விரைவில் கவுன்சிலர் பட்டியல் !சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளர் திடீரென்று அறிவிக்கப்பட்டதை போலவே, விருப்ப மனுக்கள் அடிப்படையில், சேலம் மாநகராட்சியில் வார்டு வாரியாக போட்டியிடும் கவுன்சிலர்கள் பட்டியல், எந்த நேரத்திலும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாநகர அ.தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us