அதிக கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை ஆரம்பம்
அதிக கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை ஆரம்பம்
அதிக கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை ஆரம்பம்
ADDED : செப் 16, 2011 11:36 PM
சென்னை: நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீதான விசாரணை, கட்டண நிர்ணய குழு அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
400 பள்ளிகளின் நிர்வாகிகளும், அப்பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோரையும் ஒவ்வொரு தேதியில் வரவழைத்து விசாரணை நடத்த, குழுத் தலைவர் சிங்காரவேலு நடவடிக்கை எடுத்துள்ளார். தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர்களாக இருந்த கோவிந்தராஜன், ரவிராஜ பாண்டியன் ஆகியோர், தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தனர். இந்த கட்டணங்களை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக, 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது, கட்டண நிர்ணய குழுவிடம் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த பள்ளிகள் மீது முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப, குழுத் தலைவர் சிங்காரவேலு உத்தரவிட்டார். அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் அமைந்துள்ள மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதனடிப்படையில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோரிடம் நேரடியாக விசாரணை நடத்த, குழுத் தலைவர் திட்டமிட்டிருந்தார். இந்த விசாரணை நேற்று துவங்கியது. சென்னை மற்றும் புறநகர்களைச் சேர்ந்த நான்கு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் அப்பள்ளி பெற்றோரை அழைத்து, நேற்று காலை குழுத் தலைவர் சிங்காரவேலு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட பள்ளிகளின் நிர்வாகிகளையும், பெற்றோரையும் அழைத்து, குழுத் தலைவர் விசாரணை நடத்த உள்ளார். விசாரணைக்குப் பின், பள்ளிகள் தவறு செய்தது ஊர்ஜிதமானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.