Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/300 மாணவர்களை "சமாளிக்க' 2 ஆசிரியர்கள்

300 மாணவர்களை "சமாளிக்க' 2 ஆசிரியர்கள்

300 மாணவர்களை "சமாளிக்க' 2 ஆசிரியர்கள்

300 மாணவர்களை "சமாளிக்க' 2 ஆசிரியர்கள்

ADDED : செப் 14, 2011 03:22 AM


Google News
வெளியம்பாக்கம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில், இரு ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தும் அவலம் தொடர்கிறது. மேலும், பத்தாம் வகுப்பு முடிக்கும் இப்பள்ளி மாணவ, மாணவியர், 8 கி.மீ., தொலைவிலுள்ள கீழ்கொடுங்காவலூர் கிராமத்திலுள்ள பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையிலிருந்து, 110 கி.மீ., தொலைவில், மேல்மருவத்தூர் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது வெளியம்பாக்கம் கிராமம்.

இக்கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர், ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள்.ஆதிதிராவிடர் காலனியில் இருந்து, தினமும் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் கால்கடுக்க நடந்து சென்று, பள்ளியில் கல்வி கற்கின்றனர். இது தவிர குறிப்பேடு, அம்மனம்பாக்கம், அதியனூர், அதியகுப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் இங்கு படிக்கின்றனர்.

பள்ளியில், போதிய இடவசதி இல்லாததால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 4 லட்சம் ரூபாய் செலவில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இப்பள்ளியில் புதிதாக தலைமை ஆசிரியர் ஒருவர், உதவி ஆசிரியர்கள் மூவர், கணித ஆசிரியர்கள் இருவர், அறிவியல் ஆசிரியர் ஒருவர், தமிழாசிரியர் ஒருவர், இடைநிலை ஆசிரியர்கள் மூவர், இளநிலை உதவியாளர் ஒருவர், அலுவலக பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டனர்.ஆனால், இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது இரு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

அதில், ஒருவர் தலைமை ஆசிரியை; மற்றொருவர் கணித ஆசிரியர். 300 மாணவ, மாணவியருக்கு இந்த இரு ஆசிரியர்கள், அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 86 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளியில், இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் 29 மாணவியரும், 32 மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 8 கி.மீ., தொலைவிலுள்ள கீழ்கொடுங்காவலூர் கிராமத்திற்கு சென்று, மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியதால், பாதிப்பேர் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.

இது குறித்து, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர், செல்வம் கூறும்போது, 'அம்மனம்பாக்கம் செல்லும் பஸ் மட்டுமே, வெளியம்பாக்கம் கிராமம் வழியாக செல்கிறது. இந்த பஸ்சை பிடிக்க ஆசிரியர்கள் வந்தவாசிக்கு, 7 மணிக்கு வந்தால் தான், பள்ளி திறக்கும் நேரமான 9.30 மணிக்கு, வர முடிகிறது. காலையில் மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. மாலையில் பஸ் இல்லாததால், இங்கு பணிபுரிய ஆசிரியர்கள் ஒருவரும் விரும்புவதில்லை. மேலும், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பை முடிக்கும் மாணவ, மாணவியர், 8 கி.மீ., தூரமுள்ள கீழ்கொடுங்காவலூர் கிராமத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, தற்போது பத்தாம் வகுப்பு வரை செயல்படும் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என்றார்.இது குறித்து, செய்யாறு கல்வி மாவட்ட அதிகாரி (பொறுப்பு) ராமலிங்கம் கூறுகையில், 'கிராமப்பகுதியில் பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. வெளியம்பாக்கம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, வேறு பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியிட முறையில், வாரத்திற்கு இரு நாட்கள் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாததால், ஆசிரியர்கள் இங்கு பணிபுரிய விரும்பாமல், பணி மாறுதல் பெற்று திரும்பி விடுகின்றனர். போக்குவரத்து வசதியை மேம்படுத்தித் தரவும் கோரியுள்ளோம்' என்றார்.

- ஜி.எத்திராஜுலு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us