புறக்காவல் நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை:500 புதிய பணியிடங்கள் :கி.கணேஷ்-
புறக்காவல் நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை:500 புதிய பணியிடங்கள் :கி.கணேஷ்-
புறக்காவல் நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை:500 புதிய பணியிடங்கள் :கி.கணேஷ்-
ADDED : செப் 14, 2011 12:13 AM

போலீஸ் சேவையை விரிவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள 12 புறக்காவல் நிலையங்கள், சிறிய வகை காவல் நிலையங்களாக மேம்படுத்தப்படுவதுடன், 500 புதிய பணியிடங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மக்கள்தொகை, ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி 7.22 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை உயர்வதற்கேற்ப பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றிற்காக, தினசரி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் விளைவாக, விளை நிலங்கள் பல, தொழில் நகரங்களாக மாறிவிட்டன. இவ்வாறு மாறும் போது, அங்கு வாழும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போது அனைத்து பகுதிகளிலும் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட ஆறு முக்கிய நகர்களிலும், போலீஸ் கமிஷனரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர, 33 மாவட்டங்களிலும் எஸ்.பி., தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் தற்போது, தமிழகத்தில் 1295 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 59 புறக்காவல் நிலையங்கள், மகளிர் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக 196 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என, 1,555 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 59 புறக்காவல் நிலையங்களை பொறுத்தவரை, அதிகப்படியாக நெல்லை மாவட்டத்தில் ஐந்தும், சென்னையில் நான்கும், திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா மூன்றும், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா இரண்டும், ராமநாதபுரம், திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒன்றும், ரயில்வே போலீசில் 20 சரியான கட்டடங்கள் இல்லாமல், ஒரு எஸ்.ஐ., தலைமையில் மூன்று அல்லது நான்கு போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையில், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அருங்காட்சியக வளாகங்களில் புறக்காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் அதிகபட்சம் நான்கு போலீசார் பணியில் உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே இவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு பணியில் உள்ள போலீசாரும் பல நேரங்களில் ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் ஒரு சில புறக்காவல் நிலையங்களில் ஆட்களே இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் இருப்பதாகக் கூறப்படும் அணைக்கட்டு, காயார் ஆகிய இரண்டு புறக்காவல் நிலையங்களும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டப்பட்டு, செயல்படாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று, சில மாவட்டங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், ஏற்கனவே செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையங்கள் சில செயல்படாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் சட்டசபையில் உள்துறை, மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 59 புறக்காவல் நிலையங்களில், 12 புறக்காவல் நிலையங்கள், சிறிய வகை காவல் நிலையங்களாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.மேலும், 500 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும், இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தொடர் செலவினம் 11 கோடியே 58 லட்சம் மற்றும் தொடரா செலவினம் மூன்று கோடியே 17 லட்ச ரூபாய் என்றும் தெரிவித்திருந்தார். இதன்படி, தமிழகத்தில் உள்ள 59 புறக்காவல் நிலையங்களில், 12 புறக்காவல் நிலையங்களில் 'அப்கிரேடு' ஆவது நிச்சயம். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது,'' எந்த புறக்காவல் நிலையம் என்பது காவல் தலைமை அலுவலகத்தில் தான் முடிவெடுக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை, நான்கு புறக்காவல் நிலையங்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு புறக்காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படலாம்,'' என்றார்.அரசு அறிவித்தும் இன்னும் தரம் உயர்த்தப்படும் புறக்காவல் நிலைங்களின் பட்டியல் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இது தொடர்பான ஆய்வு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தரம் உயர்வு; வசதி குறைவு!தமிழகத்தில் 12 புறக்காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட புறக்காவல் நிலையங்களின் நிலை, சொல்லும்படியாக இல்லை. சென்னையைப் பொறுத்தவரை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை மருத்துவமனைகளில் இருந்த புறக்காவல் நிலையங்கள் ஏற்கனவே, தரம் உயர்த்தப்பட்டு, சிறிய வகை காவல் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில், ஒரு எஸ்.ஐ., உட்பட 21 பேர் பணியாற்றுகின்றனர். ராயப்பேட்டை மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில், ஆறு எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட 14 பேர் பணியாற்றி வருகின்றனர்.புறக்காவல் நிலையங்களின் நிலை குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது,'' பேருக்குத் தான் சிறிய வகை போலீஸ் நிலையம். தரம் தான் உயர்த்தப்பட்டது; உரிய கட்டடம் இல்லை. மருத்துவமனை வளாகத்தில், அந்த நிர்வாகத்தினர் கட்டிக் கொடுத்துள்ள வசதியற்ற சிறிய அறையில் தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலீசாரில் பெரும்பான்மையானோர், வேறு பணிகளுக்காக அனுப்பப்படுகின்றனர். பெரும்பாலும் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறோம். தரம் உயர்த்தப்பட்டு, உரிய பணியாளர்கள் நியமிக்கப்படும் போது, கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.