ADDED : செப் 13, 2011 12:38 AM
கடந்த 2004ல் தமிழகத்தில் பள்ளி விளையாட்டாக இடம்பிடித்த 'டேக்வாண்டோ' கலையில், மதுரையின் நிலை என்ன? என அறிந்து கொள்ள ரேஸ்கோர்ஸ் மைதானம் விரைந்தோம்.
அந்தரத்தில் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தனர் மாணவர்கள். 1980ல் மதுரை திருநகர் மணி தியேட்டரில் டேக்வாண்டோ துவங்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் முயற்சியில் ஆர்.எம்.விஸ்வநாதன், டாக்டர் சக்திவேல், அரவிந்தன் ஆகியோர் இந்த விளையாட்டை துவக்கி வைத்தனர்.துவக்கத்தில் மூன்று பேர் பயிற்சி பெற்றனர்.
தற்போதைய, உறுப்பினர்களின் எண்ணிக்கை 400. 2002ல் மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்கம் பதிவுபெற்றது. நிறுவனராக நாகராஜ், மாவட்ட தலைவராக காட்வின், பயிற்சியாளராக வெங்கடேஷ் உள்ளனர். பயிற்சி கட்டணம் மாதம் 75 ரூபாய். கிராமங்களில் பயிற்சி இலவசம். இச்சங்கத்தில் 12 'கிளப்'கள் உள்ளன. இப்போட்டியில் தமிழக அளவில், மதுரை மாணவர்கள் கலக்குகின்றனர். மகாராஷ்டிரா அகமதாபாத்தில் ஜூனில் நடந்த தேசிய போட்டியில்,
இக்கிளப்பின் தீப்தி, வைலேஷ்ராம், வருண்பாபு, வசந்த் சரவணன், யோக விக்னேஷ், கவிதா, சண்முகப்பிரியா, வீரசூர்யா வெற்றி பெற்றனர். கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல், கணக்கில் அடங்காது. உபகரண செலவு 'கிக் பேடு' 400 ரூபாய், சீருடை 400 ரூபாய். போட்டிக்கு செல்லும் செலவும், கிடைக்கும் பரிசும் மாணவர் வசம். கபடி, கம்பு சுத்துவதில் மட்டும் தமிழன் சிறந்தவன் அல்ல, டேக்வாண்டோ போன்ற வெளிநாட்டு இறக்குமதியிலும், சரக்கு நிறைந்தவன் என்பதை நிரூபித்து வருகிறது நம் மதுரை படை. டேக்வாண்டோ குறித்த சந்தேகங்களுக்கு 97519 61591ல் தொடர்பு கொள்ளலாம்.
என் கதை
கொரியாவில் உருவான தற்காப்பு கலையே டேக்வாண்டோ. ராணுவ வீரர் சோய் ஹொங் ஹி என்பவர், இதை அறிமுகப்படுத்தினார். 'டைக்கியான்' என்ற தற்காப்பு கலையின் அடிப்படையில், 1955 ஏப்.,11ல் நவீன டேக்வாண்டோ உருவாக்கப்பட்டது. இது தென்கொரியாவின் தேசிய விளையாட்டாகும். கொரிய மொழியில் 'டே' என்பதற்கு உதை, 'வாண்' என்பதற்கு கைகளால் தாக்குதல், 'டோ' என்பதற்கு கால்களால் எதிரியை செயலிழக்கச்செய்தல் என பொருள். 1973ல் டேக்வாண்டோ அமைப்பு உருவானது. 1988ல் சியோல், 1992ல் பார்சிலோனா ஓலிம்பிக் போட்டியில் காட்சி விளையாட்டாக இது இடம்பெற்றது. 2000ல் சிட்டி ஒலிம்பிக் போட்டியில் முழுமையான விளையாட்டாக அறிமுகம் ஆனது.