ரசாயன சாயம் தவிர்க்க கலர் பட்டுக் கூடுகள்: உடுமலையில் விரைவில் அறிமுகம்
ரசாயன சாயம் தவிர்க்க கலர் பட்டுக் கூடுகள்: உடுமலையில் விரைவில் அறிமுகம்
ரசாயன சாயம் தவிர்க்க கலர் பட்டுக் கூடுகள்: உடுமலையில் விரைவில் அறிமுகம்
ADDED : செப் 11, 2011 12:43 AM
உடுமலை:பட்டுத் துணிகள் உற்பத்தியில், ரசாயன முறையில் சாயமேற்றும் முறையைத் தவிர்க்க, இந்தியாவில் முதல் முறையாக, கலர் பட்டுக் கூடுகள், உடுமலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பட்டுத் துணிகள் பயன்பாட்டில், உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டு நூலிழை மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு, பல ரக பட்டுத் துணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கிராமங்களில் நெசவுப் பணிகளை மேற்கொண்டு வரும் நெசவாளர்கள் முதல், பெரிய அளவிலான தொழிற்சாலைகளிலும், பட்டுத் துணிகளை உருவாக்க, ரசாயன முறையில் சாயமேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதனால், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, பட்டுப் புழுக்கள் உற்பத்தி செய்யும் வெண்மையான பட்டு நூலிழையை, நேரடியாக, பல்வேறு வண்ணங்களில் உருவாக்க, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.மத்திய பட்டு வாரியத்தின் மைசூரு ஆராய்ச்சி நிலையத்தில், பரிசோதனை முறையில் கலர் பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, முதல் முறையாக, உடுமலை பகுதியில், விவசாயிகளிடம் நேரடியாக கலர் பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய பட்டு வாரியம் மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில்,'புதிய தொழில் நுட்ப அடிப்படையில், கலர் பட்டுக் கூடுகளை உடுமலை பகுதியில் விரைவில் விவசாயிகள் வளர்க்க உள்ளனர். முதல் கட்டமாக நான்கு வண்ணங்களில், (நீலம், ரோஸ், இளஞ்சிவப்பு, ஆகாய நீலம்) பட்டுக் கூடுகள் வளர்க்கப்படும்.இதனால், பட்டு நூலிழைக்குச் சாயமேற்றும் பணிகளுக்காக ரசாயனங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். புதிய தொழில்நுட்பங்களை உடுமலை பகுதி விவசாயிகள் எளிதாகப் பயன்படுத்துவதால், கலர் பட்டுக் கூடுகள் முதன் முதலாக இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன' என்றனர்.
தயாரிப்பது எப்படி?புழு வளர்ப்பு மனைகளில் வளர்க்கப்படும் பட்டுப் புழுக்கள், நான்கு முறை தோலுரித்த பிறகு, ஒரு சுரப்பி மூலம் தன்னைச் சுற்றி பட்டுக் கூட்டைக் கட்டும். இத்தகைய கூடுகளில் இருந்து, புழுக்கள் வெளியேற்றப்பட்ட பின், நூலிழை பிரித்தெடுக்கப்படுகிறது.கலர் பட்டுக் கூடுகளை உருவாக்க, இத்தகைய முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, மல்பெரி இலைகளை வண்ணப் பவுடரில் நனைய விட்டு, பின் பட்டுப் புழுக்களின் வாழ்க்கை சுழற்சியில், 17வது நாள் முதல், உணவாக இவ்விலைகள் அளிக்கப்படுகின்றன.இதனால், புழுக்களும் நிறம் மாறி, சுரக்கும் தன்மையும் மாற்றம் பெறுகிறது. பட்டுப் புழுக்கள் சுரக்கும் சுரப்பி வண்ணமாக மாறி, கட்டும் கூடுகளும் வண்ணங்களாக மாறி விடுகின்றன. புதிய தொழில்நுட்பத்தால் பட்டுத் துணிகள் நெசவு செய்யும் போது, நூலுக்கு வண்ணம் ஏற்றுவது தவிர்க்கப்படுகிறது.