Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வார்டு பிரிப்பு அதிகாரப்பூர்வ பட்டியல் ஒப்படைப்பதில் தாமதம்எஸ்.அசோக்குமார்

வார்டு பிரிப்பு அதிகாரப்பூர்வ பட்டியல் ஒப்படைப்பதில் தாமதம்எஸ்.அசோக்குமார்

வார்டு பிரிப்பு அதிகாரப்பூர்வ பட்டியல் ஒப்படைப்பதில் தாமதம்எஸ்.அசோக்குமார்

வார்டு பிரிப்பு அதிகாரப்பூர்வ பட்டியல் ஒப்படைப்பதில் தாமதம்எஸ்.அசோக்குமார்

ADDED : செப் 11, 2011 12:41 AM


Google News
உள்ளாட்சி வார்டு பிரிப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியல், இதுவரை மாநில தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், அரசியல்வாதிகள் மட்டத்திலும் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களுக்கு இம்முறை நேரடித் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. அதற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நெருக்கடியில் மாநில தேர்தல் கமிஷன் உள்ளது.நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமும், கிராமப்புற பகுதிகளில் ஓட்டுப் பெட்டி மூலமும், ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. இதற்காக, 40 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுப்பெட்டிகளும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 15ம்தேதி அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க., அரசின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட இலவசத் திட்டங்கள் துவங்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழகம் முழுவதும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தயாரிக்கப்பட்ட வார்டுகளின் பட்டியல், இன்னும் தேர்தல் கமிஷனிற்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படவில்லை.

உள்ளாட்சித் துறைகள் மூலம் வார்டு பிரிப்புப் பணிகள் நடந்து முடிந்துவிட்டாலும், அரசின் அனுமதி கிடைக்காததால், அவை இன்னும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தேர்தல் நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவிற்கு, இன்னும் குறுகிய காலமே இருப்பதால், பட்டியல் இன்னும் கைக்கு வராததால், தேர்தல் கமிஷன் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தனி வார்டுகள், பொது வார்டுகள், பெண்கள் வார்டுகள் உள்ளிட்ட விவரங்கள் தெரியாததால், அரசியல்வாதிகள் மட்டத்திலும் குழப்பம் அதிகரித்து உள்ளது.தற்போது, அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனு தாக்கல் நடந்து வரும் நிலையில், அங்கு வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும், இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், சமீபத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் வார்டு பட்டியல் இதுவரை ஒப்படைக்காதது குறித்து கேட்டோம். அடுத்த சில நாட்களில் பட்டியலை ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளனர்' என்றார்.

கிரேட்டர் சென்னை குழப்பம்: கிரேட்டர் சென்னையில், 200 வார்டுகள் வருகிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட பெரும்பாக்கம், கடப்பாக்கம், தீயம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளும் அடக்கம். ஆனால், இந்த ஊராட்சிகள் மாதவரம் சட்டசபைத் தொகுதியிலும், திருவள்ளூர்(தனி) லோக்சபா தொகுதியிலும் உள்ளது.இந்த வார்டுகளை சென்னை நகரில் உள்ள வடசென்னை லோக்சபா தொகுதி மற்றும் ஏதாவது ஒரு சட்டசபைத் தொகுதியில் மாற்றியாக வேண்டும். இதற்கு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுமா என்பது கேள்விகுறி தான். புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளை, கிரேட்டர் சென்னைக்குள் இழுத்ததால், மீதமுள்ள ஊராட்சிகளை இணைத்து ஒன்றிய கவுன்சிலர் பதவியை உருவாக்குவதிலும் குழப்பம் நிலவுகிறது.

இதே போன்ற குழப்பங்கள், மாநிலம் முழுவதும் சில வார்டுகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தான், புதிய வார்டு பிரிப்புப் பட்டியல், இன்னும் தேர்தல் கமிஷனிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வரும்... ஆனா வராது! கடந்த ஆட்சியில், தமிழ் மொழி வளர்ச்சி என்ற பெயரில், பல நூறு கோடி ரூபாய் செலவழித்து, செம்மொழி மாநாடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அரசு வெப்சைட்கள் மற்றும் உத்தரவுகள் தமிழில் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால், மாநில தேர்தல் கமிஷன் வெப்சைட்டை தமிழில் மாற்ற, கடந்த ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வெப்சைட் உள்ளது. தற்போது, பதவிக் காலம் முடியவுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமின்றி, புதிதாகப் போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள், இந்த வெப்சைட்டை தமிழில் மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.இதைத் தமிழில் மாற்றுவதற்கான பணிகள், 'நிக்' எனப்படும் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மாதக் கணக்கில் அங்கு பணிகள் தாமதமாக நடப்பதால், உள்ளாட்சித் தேர்தலுக்குள், அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழில் தேர்தல் கமிஷன் வெப்சைட் வருமா என்பது சந்தேகம் தான்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு :

மாநகராட்சிகள் - 10 (சென்னை, கோவை, திருச்சி,

மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி)

மூன்றாம் நிலை நகராட்சிகள் - 50

நகராட்சிகள் - 98

பேரூராட்சிகள் - 561

கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு

மாவட்ட பஞ்சாயத்துகள் - 29

ஊராட்சி ஒன்றியங்கள் - 385

ஊராட்சிகள் - 12,618.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us