Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பட்டர்பிளை மிக்சி: அரசின் இலவசத்தை தயாரிப்பதில் தீவிரம்

பட்டர்பிளை மிக்சி: அரசின் இலவசத்தை தயாரிப்பதில் தீவிரம்

பட்டர்பிளை மிக்சி: அரசின் இலவசத்தை தயாரிப்பதில் தீவிரம்

பட்டர்பிளை மிக்சி: அரசின் இலவசத்தை தயாரிப்பதில் தீவிரம்

UPDATED : செப் 07, 2011 12:43 AMADDED : செப் 06, 2011 11:35 PM


Google News
Latest Tamil News

தமிழக அரசு வழங்க உள்ள இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகிய பொருட்களைத் தயாரிக்க, சந்தையில் பிரபலமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில், இலவசப் பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.



தமிழகத்தின் பச்சை நிற ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் 1.85 கோடி பேருக்கு, இலவசமாக மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை வழங்கப்பட உள்ளன. வரும் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளில், முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். சந்தையில் பிரபலமாக விளங்கும் நிறுவனங்களுக்கு, இலவசப் பொருட்களுக்கான தயாரிப்பு ஆணைகள் தரப்பட்டுள்ளன. கிரைண்டர் மற்றும் மின் விசிறி தயாரிக்கும் நிறுவனங்கள் கோவையில், தயாரிப்பு பணிகளில் தீவிரமாக உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் மிக்சி தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. 'பட்டர்பிளை' பிராண்டை விற்கும் காந்திமதி அப்ளையன்ஸ் நிறுவனம், மிக்சி, மின் விசிறி மற்றும் கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்களையும் தயாரிக்கும் ஆணை பெற்றுள்ளது.



இது தவிர, மும்பை மற்றும் ஆந்திராவில் பிரபலமான காஞ்சன், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பிரபலமான பிரீமியர், கர்நாடகாவைச் சேர்ந்த சித்தார்த்தா இன்டர்நேஷனல் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் மிக்சிகளைத் தயாரிக்கின்றன. பட்டர்பிளை, அமிர்தா, சவுபாக்யா, பி.ஜி.என்., தேவ் இன்டர்நேஷனல், விஜயலஷ்மி உள்ளிட்ட நிறுவனங்கள் டேபிள்டாப் கிரைண்டர் தயாரிக்கவும், கிராம்ப்டன் க்ரீவ்ஸ், சவுகிராப்ட், பட்டர்பிளை, மார்க் ஆகிய நிறுவனங்கள் மேஜை, மின் விசிறி தயாரிக்கவும் அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. சந்தையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் முதல் ரகத்திலேயே, இலவச பொருட்களையும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



பொருட்களில் மின் பிரச்னை, தொழில்நுட்பக் கோளாறு, கையாளும்போது ஏற்படும் சேதம் ஆகியவற்றுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும். பொருட்களின் வெளிபாகங்கள் எந்தவித மின் அதிர்ச்சியை ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. மத்திய அரசின் விதிப்படி செயல்படும், பி.ஐ.எஸ்., தர முத்திரை பெற்ற பின், பொருட்கள் அனைத்தும் சப்ளை செய்யப்படும். இலவசப் பொருட்களின் நிறங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்களில், இயற்கையாக பயன்படுத்தும் நிறத்திலேயே இந்த பொருட்களும் தயாரிக்கப்படும். ஆனால், இந்த பொருட்களின் மீது, 'அரசின் அன்பளிப்பு' என்ற குறிப்பை தவிர்க்க முடியாது.



சீன தயாரிப்புக்கு 'தடா': சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையில் இடம் பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறும்போது, 'பொதுமக்கள் தாங்கள் நேரடியாக பார்த்து வாங்கினால் கூட, இவ்வளவு தரத்தை அறிந்திருக்க முடியாது. அவ்வளவு தரம், கட்டுப்பாடு, கியாரண்டியுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், சீன தயாரிப்பு உதிரி பாகங்கள் கலந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, எந்த குறையுமில்லாத உலகத்தரம் வாய்ந்த மின்னணு உதிரி பாகங்களால், இலவசப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன' என்றார். இதில் போலிகள் கலப்படமாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.



நமது சிறப்பு நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us