தங்கக்கட்டிகளுடன் நைஜருக்கு கடாபி தப்பி ஓட்டம்?
தங்கக்கட்டிகளுடன் நைஜருக்கு கடாபி தப்பி ஓட்டம்?
தங்கக்கட்டிகளுடன் நைஜருக்கு கடாபி தப்பி ஓட்டம்?
ADDED : செப் 06, 2011 11:19 PM

டிரிபோலி: லிபியா தலைநகர் டிரிபோலிக்குத் தெற்கில் உள்ள ஜூப்ரா நகரில் இருந்து 250 கார்களில் தங்கக் கட்டிகள், யூரோ மற்றும் டாலர்கள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு கடாபி, அண்டை நாடான நைஜருக்கு ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று விடுத்த அறிக்கையில், கடாபி இன்னும் லிபியாவில் தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். டிரிபோலிக்குத் தெற்கில் உள்ள பானி வாலித், சபா, ஜூப்ரா, கிழக்கில் உள்ள சிர்ட் ஆகிய நகரங்கள் மட்டும் தற்போது கடாபி ஆதரவாளர்களின் பிடியில் உள்ளது. இங்குள்ளவர்களுடன் இடைக்கால அரசு பேச்சுவார்த்தை நடத்திப் பணிய வைக்க முயன்று வருகிறது.
250 கார்களில் தங்கக் கட்டிகள்: இந்நிலையில், ஜூப்ரா நகரில் இருந்து ஆயுதங்கள் பொருத்தப்பட்ட, 250 கார்கள் நேற்று அதிகாலை புறப்பட்டு, அண்டை நாடான நைஜருக்குச் சென்றன. இத்தகவலை பிரான்ஸ் மற்றும் நைஜர் ராணுவ அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தினர். இந்த 250 கார்களில், 60 கார்களில் லிபியாவைச் சேர்ந்தவர்களும், பிறவற்றில், நைஜரைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இக்கார்கள், நைஜரின், அகாடெஸ் நகருக்கு நேற்று சென்றடைந்ததாகவும், அங்கிருந்து நைஜர் தலைநகர் நியாமே நகருக்கு நேற்று புறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லிபியா இடைக்கால அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அந்தக் கார்களில், தங்கக் கட்டிகள், யூரோ மற்றும் டாலர் கரன்சிகள் ஆகியவை இருந்தன' என்றார்.
ஓடிப் போனாரா கடாபி? : கடாபியின் மனைவி சாபியா, மகள் ஆயிஷா, மகன்கள் முகமது மற்றும் ஹானிபல் ஆகியோர் அல்ஜீரியாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். மற்ற மகன்களில் சயீப் அல் இஸ்லாம் மற்றும் முட்டாசிம் இருவரும் பானி வாலித் நகரை விட்டு ஓடிவிட்டதாகவும், சயீப் அல் அராப் மற்றும் கமீஸ் கடாபி கொல்லப்பட்டதாகவும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. சாடி கடாபி இன்னும் பானி வாலித் நகரில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் நைஜருக்கு சென்றுள்ள வாகனங்களில் கடாபியும் அவரது உதவியாளர்கள் சிலரும் இருந்திருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. நைஜரின் அண்டை நாடான, புர்கினோ பாசோ, கடாபிக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
எழும்பும் சந்தேகங்கள்: ஆனால், கடாபி அப்படி தப்பினால், அது 'நேட்டோ' படையினருக்குத் தெரியாமல் நடந்திருக்குமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இதுகுறித்து 'நேட்டோ' செய்தித் தொடர்பாளர் ரோலண்ட் லவோய் கூறுகையில்,'லிபியாவில் எங்கள் வேலை மக்களைப் பாதுகாப்பதுதானே தவிர, யார் யார் எங்கெங்கு ஓடுகின்றனர் என்று அவர்களை விரட்டிப் பிடிப்பதல்ல' என்று தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜூப்ராவில் இருந்து அகாடெசுக்குச் சென்ற பாதையை கடாபி எதிர்ப்பாளர்கள் கண்காணிக்காமல் விட்டது ஏன் என்று மற்றொரு கேள்வியும் எழுகிறது. ஒருவேளை, எதிர்ப்பாளர்களே கடாபி தப்பியோடட்டும் என்று விட்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
லிபியாவில் கடாபி? : இதற்கிடையில் கடாபியின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் நேற்று விடுத்த அறிக்கையில்,'கடாபி நல்ல உடல்நிலையுடன் உள்ளார். மீண்டும் லிபியாவைக் கைப்பற்றத் திட்டம் தீட்டி வருகிறார். அவர் இன்னும் லிபியாவில் தான் உள்ளார்' என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் நிபந்தனைகள்: பானி வாலித்தை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அந்நகரில் உள்ள பழங்குடியினத் தலைவர்களுடன் இடைக்கால அரசின் பிரதிநிதி அப்துல்லா கன்ஷில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 'கடாபி ஆதரவாளர்கள் என்பதற்காக எதிர்ப்பாளர்கள் எங்களைப் பழிவாங்கக் கூடாது; எங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும் வலியுறுத்தக் கூடாது' என இரு நிபந்தனைகளை பழங்குடியினத் தலைவர்கள் விதித்திருப்பதாக கன்ஷில் தெரிவித்தார்.