பழைய நடைமுறைகளை எல்லாம் மாற்றுங்கள்: தேர்வு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
பழைய நடைமுறைகளை எல்லாம் மாற்றுங்கள்: தேர்வு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
பழைய நடைமுறைகளை எல்லாம் மாற்றுங்கள்: தேர்வு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: 'போட்டித் தேர்வு நடத்தும் அமைப்புகள், தகவல் அறியும் சட்டத்தில், தேர்வு எழுதுவோருக்கு தகவல்களை அளிக்க வேண்டும்.
இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் மையம்(ஐ.சி.ஏ.ஐ.,) நடத்தும் நுழைவுத்தேர்வில் பங்கேற்ற நபர் ஒருவர், மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தேர்வு முறை குறித்த தகவல்களை, ஐ.சி.ஏ.ஐ., வெளியிட உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார். இதை விசாரித்த மும்பை ஐகோர்ட், தகவல்களை அளிக்கும்படி ஐ.சி.ஏ.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐ.சி.ஏ.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: ஐ.சி.ஏ.ஐ., போன்ற, போட்டி தேர்வு நடத்தும் அமைப்புகள் , காலம் காலமாக கடை பிடித்துவந்த பழைய நடைமுறைகளை கைவிட வேண்டும். போதுமான தகவல்களை வெளியிடும் வகையில், நவீன நடைமுறைக்கு மாறிக்கொள்ள வேண்டும். வெளிப்படையான அணுகுமுறை இருந்தால் தான், ஊழலை தடுக்கமுடியும். இதற்கு பொறுப்பும் முக்கியம். இதற்கு முன், பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற நடைமுறைகள் இருந்து வந்தன.
தற்போதைய யுகம், எதுவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறது. பொது அமைப்புகளும், தகவல்களை அளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். இதற்காக, ஆவணங்களை பராமரிப்பதும், தகவல்களை திரட்டியளிப்பதும் கூடுதல் பணி என்பதை மறுப்பதற்கு இல்லை. கூடுதல் பணி என்ற ஒரே காரணத்திற்காக தகவல்களை அளிக்காமல் இருக்க முடியாது. கூடுதல் பணி தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். போட்டி தேர்வு நடத்தும் அமைப்புகளுக்கு ஆர்.டி.ஐ., சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடியாது. தேர்வு நடத்தும் அமைப்புகள் எந்த முறையில், தேர்வு முறைகளை மேற்கொள்கின்றன என்ற தகவல்களை வெளிக்கொணர்வதில் தவறு இல்லை. எனவே, ஆர்.டி.ஐ., சட்டத்திற்கு ஏற்ப தங்கள் நடைமுறைகளை மாற்றி கொண்டு , தகவல் கேட்பவர்களுக்கு தகவல்களை தர வேண்டும். இந்த வகையில் மனுதாரரின் அப்பீல் மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.