PUBLISHED ON : செப் 04, 2011 12:00 AM

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி பேட்டி: ஊழலை ஒழிக்க மூன்று வகையான நடவடிக்கை தேவை. ஒன்று இரும்புப் பிடி சட்டம் இயற்ற வேண்டும்; இதை அன்னா ஹசாரே வலியுறுத்துகிறார். இரண்டாவது, ஊழலை ஒழிக்க ஏற்கனவே உள்ள சட்டத்தை முடுக்கி வெற்றிகரமாக செயல்படுத்த வைக்க வேண்டும். இதை நான் செய்கிறேன். மூன்றாவது, ஊழல் விஷயத்தில் மக்களின் அணுகுமுறை மாற வேண்டும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் மனோபாவம் மாறுவதற்கு, ஆன்மிக மறுமலர்ச்சி வர வேண்டும். இதை செய்ய, நம் நாட்டில் உள்ள சாமியார்களும், சாதுக்களும் முன்வர வேண்டும்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் பேட்டி: அன்னா ஹசாரேயின் போராட்டம், எம்.பி.,க்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இனிமேல் பொறுப்புள்ளவர்களாகச் செயல்படுவர். இந்தப் போராட்டத்திற்கு முன் நாங்கள், 14 மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து, லஞ்ச, ஊழலுக்கு எதிராக மக்களை உறுதிமொழி எடுக்க வைத்தோம். அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி, அன்னா ஹசாரே போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா பேட்டி: தமிழக சட்டசபையில், மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு சட்டசபையில், உள்ள ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதது மற்றும் மத்திய அமைச்சர் சிதம்பரம், கோர்ட் தீர்ப்பு செயல்படுத்தப்படும் என அறிவிப்பது ஆகியவை இந்த விவகாரத்தில் காங்கிரசின் இரட்டை வேடத்தை மக்களிடம் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழறிஞர் தமிழண்ணல் பேச்சு: மனப்பாடம் மூலம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவரை அதிகளவில் பாராட்டுவதால், பல திறமை உள்ள மாணவர்கள் அதைக் கண்டு தளர்ச்சி அடைந்து விடுகின்றனர். மதிப்பெண் அதிகம் பெற்ற மாணவனே உயர்ந்தவன் என்று கூறிவிட முடியாது. அனைவருக்கும் ஏதாவது ஒரு திறமை உண்டு. பள்ளிப் படிப்பு வேறு, திறமை வேறு.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் பேட்டி: தமிழகத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அவர்களை கோர்ட் காவலில் வைக்காமல், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா பேச்சு : சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தன் அப்பாவிடம் அனுமதி கேட்டிருக்கிறார் ஸ்டாலின். போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இனி எந்த தி.மு.க., காரருக்கும் தேவையில்லை. கூடிய விரைவில் கருணாநிதி, அழகிரி, உட்பட அனைவரும் சிறை காற்றைத் தான் சுவாசிக்கப் போகின்றனர்.
மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி: இனி எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்பது, கருணாநிதிக்கே நன்றாகத் தெரியும். அந்த அச்ச உணர்வில் தான் அடங்கிக் கிடக்கிறார். அவர், ஐந்து ஆண்டுகளில் செய்யத் தவறியதை ஜெயலலிதா, 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார்.
இந்திய விமானப் படை தளபதி புருவ்னி பேட்டி: இந்திய எல்லையில் சீனா அணு ஏவுகணைகளை நிறுத்தியிருப்பதாக வெளியான தகவல் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. இது போன்ற சவால்களை முறியடிக்க, நம் ராணுவத்திடம் தனி திட்டம் உள்ளது. அதை பின்பற்றி வருகிறோம்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் பேட்டி: எல்லா கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்கள் சங்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு என சில கொள்கைகள் இருக்கும். ஆனாலும், சங்கம் என்று வரும்போது, அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் சங்கத்தை நடத்துவதையே சாதனையாகக் கருதுகிறேன். இதை செயலிலும் காட்டுவேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேச்சு: இயற்கை அழிந்து வருவது குறித்து ஆட்சியாளர்கள் ஓரிருவர் கவலைப்பட்டால் மட்டும் போதாது. மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இயற்கை கொடுத்த வரத்தை அழித்துவிட்டு நாம் நீண்ட நாள் வாழ முடியாது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால், நம்மால் தாங்க முடியாது. எனவே, அவற்றை நாம் காக்க முற்பட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: கடந்த, 30 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம், குறைந்துவிட்டது. கிணறு வெட்டினாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


