ADDED : செப் 04, 2011 01:36 AM

சென்னை: சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு, கடல் வள மேலாண்மைத் துறை சார்பில், மெரீனா கடற்கரையில் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னசாமி, நிகழ்ச்சியை துவங்கி வைத்துப் பேசியதாவது: கடல் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடற்கரைகளில் கொட்டப்படும் குப்பை, கடல் நீரோடு கலந்து, கழிவாக மாறுகிறது. கழிவுகள் கடலோடு கலந்து விடுவதால், கடல் வாழ் உயிரிகள் பாதிக்கப்படும். இதனைத் தடுக்க, மெரினாவிலிருந்து கன்னியாகுமரி வரையிலான சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. குப்பையால் பரவும் நோய்கள் பற்றி, மக்கள் தெளிவு பெற வேண்டும். கடற்கரையை சுத்தம் செய்வது குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வரும் 2015ம் ஆண்டிற்குள், சென்னை குப்பையில்லா நகரமாக மாற்றப்பட வேண்டும். கடல் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இன்று பலர் கடற்கரையை சுத்தம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். சென்னை மாநகராட்சியில், 300 கி.மீ., அளவு சுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், பலர் ஆர்வமுடன் குப்பையை அப்புறப்படுத்தினர். அடையாறு ஆற்றினை சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மெரீனா, பெசன்ட் நகர், எலியட்ஸ் போன்ற கடற்கரைப் பகுதிகளில், தேசிய மாணவர் படை மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட, 4 ஆயிரத்து 207 பேர் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில், தமிழகத்திற்கான அமெரிக்க துணைத் தூதர் ஜெனிபர் மசின்டயர், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.