ADDED : செப் 02, 2011 11:22 PM
கூடலூர் : கூடலூர் ஊராட்சி பள்ளி ஆசிரியர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கூடலூர் பாரதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ரவிக்குமார் என்பவர், சுபாஷ் நகர் ஊராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டார். இது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் கல்விக்குழு தலைவர் வரதராஜ் தலைமையில், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மாற்று உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர். தகவலறிந்த கூடலூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் கலாவதி சம்பவ இடத்துக்கு வந்து, பெற்றோரை சமாதானப்படுத்தி, ஆசிரியர் பணி மாற்றம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனால், முற்றுகை விலக்கி கொள்ளப்பட்டது.