Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/விமான நிலையத்தில் "கப்ஸ்'; பயணிகள் ஓட்டம் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விமான நிலையத்தில் "கப்ஸ்'; பயணிகள் ஓட்டம் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விமான நிலையத்தில் "கப்ஸ்'; பயணிகள் ஓட்டம் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விமான நிலையத்தில் "கப்ஸ்'; பயணிகள் ஓட்டம் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஆக 30, 2011 10:29 PM


Google News

திரிசூலம் : சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை முனையத்தில், இரவு நேரங்களில் திடீரென கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வரும் பயணிகள், மூக்கைப் பொத்திக் கொண்டு ஓட்டமெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் பல்வேறு இடங்களில், பயணிகள் மற்றும் ஊழியர்களின் வசதிக்காக, கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் குழாய்களில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கழிவு நீர் வெளியேற முடியாமல், தரை வழியாக வெளியேறி வருகிறது.



கடந்த இரு தினங்களுக்கு முன், இரவு 9 மணிக்கு கழிவு நீர் வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. கழிப்பறைகளில் கழிவுநீர் வெளியேற முடியாமல், தரைவழியாக வெளியேறத் துவங்கியது. ஒரு சில நிமிடங்களில், உள்நாட்டு வருகை முனையத்தின் அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பரவத் துவங்கியது. இதனால், வளாகம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசத் துவங்கியது. இந்த நேரத்தில், விமானங்களில் இருந்து இறங்கி வந்த பயணிகள், துர்நாற்றம் தாங்காமல் அதிர்ச்சியடைந்தனர். பலர், முக்கைப் பிடித்தபடி, தாவிக் குதித்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர். விமான நிலைய ஆணையத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து, பல பயணிகள் ஆணைய அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.



அவர்களை சமாதானப்படுத்திய விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக இயந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், துர்நாற்றம் நீடித்ததால், உள்நாட்டு வளாகம் முழுவதும், கிருமிநாசினியை 'ஸ்பிரே' செய்தனர். விமான நிலையத்தில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாக வேதனை தெரிவித்த பயணிகள், இவற்றை சீர் செய்ய விமான நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us