Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனபோக்கு : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதில்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனபோக்கு : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதில்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனபோக்கு : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதில்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனபோக்கு : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதில்

ADDED : ஆக 30, 2011 09:41 PM


Google News

ஸ்ரீபெரும்புதூர் : பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, புதியக் கட்டடம் கட்டும் பணியை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியுள்ளது. இப்பள்ளி, 1952ல், துவக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,150 மாணவியர் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லை. போதியக் கட்டட வசதி இல்லை. ஏற்கனவே உள்ள கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால், மாணவியர் மரத்தடியில் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சுகாதாரமான கழிப்பிட வசதியும் இல்லை.



இது குறித்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி, ஜூன் 16ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி வெளியானதும், கலெக்டர், முதன்மைக் கல்வி அலுவலர், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி., டி.ஆர்.பாலு, அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட, அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதைத் தொடர்ந்து நபார்டு நிதியுதவியுடன், 2 கோடியே, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.



இந்நிதியில், 30 வகுப்பறைகள், இரண்டு அறிவியல் ஆய்வுக் கூடம், ஆகியவற்றுடன், மூன்று மாடி கட்டடம் கட்ட, வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறையும், 450 சதுரடி பரப்பளவில், காற்றோட்ட வசதியுடன் அமையவுள்ளது. கட்டுமானப்பணிக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. கட்டடம் கட்டுவதற்கு வசதியாக, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படித்த மாணவியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.



சிதிலமடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு, அந்த இடத்தில் கட்டடம் கட்ட முடிவு செய்து, மண் பரிசோதனை நடத்தப்பட்டது.ஆனால், டெண்டர் விடப்பட்டு, எட்டு மாதங்களாகியும், சிதிலமடைந்த கட்டடத்தை இடிக்க, பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், புதிதாகக் கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பத்துக்கும் மேற்பட்ட சிதிலமடைந்த கட்டடங்கள் உள்ளன. அவற்றை இடிப்பதற்காக, துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அனைத்து கட்டடங்களையும், ஒரே நேரத்தில் இடிக்க உத்தரவு வழங்க முடியாது. விலை உயர்ந்த தேக்கு மரங்கள் உள்ளன. இதனால், கட்டடத்தை இடிக்க உத்தரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அனைத்து கட்டடங்களையும், ஒரே நேரத்தில் இடிக்க உத்தரவு கிடைக்காததால், தனித்தனியே இடிக்க அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும், என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மாணவியரின் கல்வி பாதிப்பு

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், புதிய கட்டடம் கட்டுவதற்காக, பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அதேபோல், 13 ஆசிரியர்கள் அங்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரே பள்ளியிலிருக்கும்போது, ஆசிரியர்கள் மேல்நிலைவகுப்புகளுக்கு பாடம் எடுப்பதுடன், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, மாணவர்களுக்கு பாடம் எடுப்பர். இப்போது இரண்டு இடங்களில் ஆசிரியர்கள் இருக்க வேண்டியிருப்பதால், மாணவியருக்கு பாடங்களை போதிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆய்வுக்கூட வசதியில்லாததாலும், மாணவியர் சிரமப்படுகின்றனர். மாணவியர் நலன் கருதி, புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவாக துவக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ஜெ.ரவி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us