/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு வீடுகள் உள் வாடகைக்கு : சம்பாதிக்கும் சமூக சேவகர்கள்அரசு வீடுகள் உள் வாடகைக்கு : சம்பாதிக்கும் சமூக சேவகர்கள்
அரசு வீடுகள் உள் வாடகைக்கு : சம்பாதிக்கும் சமூக சேவகர்கள்
அரசு வீடுகள் உள் வாடகைக்கு : சம்பாதிக்கும் சமூக சேவகர்கள்
அரசு வீடுகள் உள் வாடகைக்கு : சம்பாதிக்கும் சமூக சேவகர்கள்
ADDED : ஆக 29, 2011 11:50 PM
கோவை : அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பில், சமூக சேவகர் ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கீடு பெற்ற பலரும் உள் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தது, வெளிச் சத்துக்கு வந்துள்ளது.கோவையில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளில், 18க்கும் அதிகமான சமூக சேவகர் (!?)களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்கில் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில், பெரும்பாலான வீடுகள், அரசியல்வாதிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.அ.தி.மு.க., ஆட்சியில்தான் இந்த ஒதுக்கீடு அதிகமாகத் தரப்பட்டுள்ளது. அந்த வீடுகளில், அந்த நபர்களும் குடியிருப்பதில்லை; வாரியத்தால் நிர்ணயித்த வாடகையையும் அவர்கள் செலுத்துவதும் இல்லை; அதை வசூலிப்பது பற்றி வாரிய அலுவலர்களும் கவலைப்படுவதில்லை; இந்த விவகாரம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பி.எஸ்.என்.எஸ்., அலுவலகத்துக்குப் பின்புறத்திலுள்ள 'ஏ-2' என்ற எண்ணுடைய வீடு, கடந்த 2002ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது சீனிவாசன் என்பவருக்கு சமூகசேவகர் என்ற பெயரில் ஒதுக்கப்பட்டது. அப்போது, டில்லி சிறப்புப் பிரதிநிதியாக இருந்த மைத்ரேயன் தான், இதற்கு பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில், அவர் குடியிருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால், உள் வாடகைக்குக் குடியிருந்தது உறுதியாகியுள்ளது. கடந்த 2004 டிச.,24லிருந்து இந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த தன்னை, சீனிவாசனும், போலீசாரும் சேர்ந்து கட் டாயமாக வெளியேற்றிப் பூட்டி விட்டதாக வெங்கட்ரமணா (51) என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:இரண்டு லட்ச ரூபாய் அட்வான்ஸ், 5 ஆயிரம் ரூபாய் மாத வாடகை என்று பேசி, சீனிவாசன் என்னிடம் வீட்டைக் கொடுத்தார். அதிலிருந்து சரியாக வாடகை கொடுத்து வந்தேன். 2009ல் திடீரென நான்கு லட்ச ரூபாய் அட்வான்ஸ் வேண்டும், வாடகை 10 ஆயிரம் ரூபாய் என்றார். நான், 'அவ்வளவு வாடகை தர முடியாது, அட்வான்சைக் கொடுத்தால் வீட்டைக் காலி செய்து கொள்கிறேன்' என்றேன்.எனக்கு முன்பாக, அதே வீட்டில் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்காமல் இழுத்தடித்ததாகத் தெரியவந்ததால், அப்படிச் சொன்னேன். ஆட்களைக் கூப்பிட்டு வந்து மிரட்டினார்; நான் காலி செய்யவில்லை. ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன்; கோர்ட்டுக்குப் போகச் சொன்னார்கள்.சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்; வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையில், ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், என்னைக் கூப்பிட்டு 'வீட்டைக் காலி செய்து விடு' என்று மிரட்டினார். நான், துணை கமிஷனர் ஹேமாவிடம் புகார் செய்தேன். அவரும் அதையே தான் கூறினார். நான் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தேன்.நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு, இன்ஸ்பெக்டர் கணேசன் கூப்பிட்டு அனுப்பினார். ஸ்டேஷனில் சீனிவாசனும் இருந்தார். அவர் முன்னிலையில்,'இரவு 12.00 மணிக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால், அப்பன், மகன் ரெண்டு பேரையும் உள்ளே தள்ளி விடுவேன்' என்று இன்ஸ்பெக்டர் கணேசன் மிரட்டி, வீட்டைக் காலி செய்ய வைத்து விட்டார்.இவ்வாறு, வெங்கட்ரமணா கூறினார்.இவரது புகார் குறித்து, கருத்து கேட்பதற்காக இன்ஸ்பெக்டர் கணேசனை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவே இல்லை. வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சமூகசேவகர் ஒதுக்கீட்டில் வீடு வாங்கியவர்கள், உள் வாடகைக்கு விட்டிருப்பது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்; விரைவில் நல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.சொந்த வீடு இல்லாமல், அரசு அலுவலர் பலரும் அநியாய வாடகை கொடுத்து, தனியார் வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். ஆனால், அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பு வீடுகளை, சமூக சேவகர் என்ற பெயரில், பணம் படைத்தோரும், அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்து, உள் வாடகைக்கு விட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதை வேடிக்கை பார்ப்பது தான் வாரியம் செய்யும் காரியமா?.