ADDED : ஆக 29, 2011 11:05 PM
காஞ்சிபுரம் : கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, தொடர்ந்து தொழில் வழங்கக் கோரி, கே.எஸ்.பார்த்தசாரதி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில், காஞ்சிபுரத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.காமாட்சியம்மன் காலனியில் உள்ள, கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் கமலநாதன் தலைமை தாங்கினார்.
சங்க ஆலோசகர் ராஜகோபால், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். சங்கச் செயலர் ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, தொடர்ந்து தொழில் வழங்க வேண்டும். தொடர்ந்து மூலப் பொருட்களான, தங்கம், வெள்ளி கடும் விலை உயரக் காணமான, ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேங்கி உள்ள சேலைகளை, கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டி, மான்யம் மற்றும் தள்ளுபடி மான்யத்தை உடனே வழங்க வேண்டும்.மத்திய அரசு அறிவித்தபடி, கூட்டுறவு சங்கங்களின் காசு கடனை தள்ளுபடி செய்து, கூட்டுறவு சங்கங்களை கடன் சுமையிலிருந்து பாதுகாத்திட வேண்டும். நடப்பு ஆண்டிற்கான பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும், ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், நெசவாளர்களின் வீட்டுக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.