அனைத்துக்கட்சிக்கூட்டம் தொடங்கியது; ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை:
அனைத்துக்கட்சிக்கூட்டம் தொடங்கியது; ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை:
அனைத்துக்கட்சிக்கூட்டம் தொடங்கியது; ஜன்லோக்பால் மசோதா பரிசீலனை:
UPDATED : ஆக 24, 2011 06:08 PM
ADDED : ஆக 24, 2011 07:27 AM

புதுடில்லி: ஜன்லோக்பால் மசோதா தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இதில் அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள ஜன்லோக்பால் மசோதா பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானதாக உள்ளது . வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்த அறப்போராட்டத்திற்கு நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நாளுக்கு நாள் வலுத்தும் வருகிறது. வலுவான ஜன்லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எழுத்துபூர்வமான அறிவிப்பு வரும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என ஹசாரே கூறியுள்ளார். ஹசாரேயின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 9-வது நாளாக தொடர்கிறது.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், ஹசாரேயின் ஜன்லோக்பாலை நிறைவேற்றும் வகையில் சமரசத்துக்கு இறங்கி வந்துள்ளார். இன்றுமாலை அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெறவிருப்பதால் அதையொட்டி பார்லிமென்ட்ரி விவகாரங்களுக்கான குழுவை பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை கூட்டினார். அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் அரசு எடுக்கவேண்டிய நிலை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு அனைத்துக்கட்சிக்கூட்டம் டில்லியில் தொடங்கியது.. இக்கூட்டத்தில் பா.ஜ. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளவ. இதில் பிரதமர், நீதித்துறையில் உள்ளவர்கள் ஜன்லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை எனபன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில் தற்போது பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா கைவிடப்படுகிறது. ஹசாரேயின் ஜன்லோக்பால் மசோதா அனைத்துக்கட்சிகளின் சம்மதத்துடன் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றுவதற்கு வசதியாக , தற்போது நடந்துவரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரினை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.