PUBLISHED ON : ஆக 24, 2011 12:00 AM

பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் அபிஷேக் சிங்வி: அன்னா ஹசாரேவின் மேலும் சில கோரிக்கைகளை ஏற்று, லோக்பால் மசோதாவில் பெரிய அளவில் மாற்றம் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
டவுட் தனபாலு: பெரிய மாற்றமெல்லாம் வேண்டாம்... நீங்க, 'லோக்பால்' மசோதா தாக்கல் பண்ணியிருக்கீங்க... அவங்க, 'ஜன் லோக்பால் மசோதா' தாக்கல் பண்ணச் சொல்றாங்க... பேசாம, உங்க மசோதா முன்னால, 'ஜன்' சேர்த்துட்டு, இதுதாங்க ஜன் லோக்பால் மசோதான்னு காமெடி பண்ணிடுங்க... அந்த அதிர்ச்சியிலயே, அவங்க போராட்டத்தைக் கைவிட்டுடுவாங்க...!
தி.மு.க., தலைவர் கருணாநிதி: பிரதமரை கொண்டு திறப்பு விழாவெல்லாம் நிகழ்த்திய தலைமைச் செயலகத்துக்கான கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றப் போகிறேன் என்றால், அதற்கு, மேலும் எவ்வளவு செலவாகும்? தற்போது செலவழிக்கப்பட்ட நிதியும் வீணாகும் அல்லவா?
டவுட் தனபாலு: சரியாப் போச்சு... வேலையை முழுசா முடிக்காத கட்டடத்துக்கு திறப்பு விழா நடத்தி, அதுல பிரதமரை ஏமாத்துறதுக்காக, ரெண்டு கோடி ரூபாய் செலவுல சினிமா செட்டிங் கோபுரம் கட்டின நீங்க, மக்கள் பணம் வீணாகுறதைப் பத்தி பேசலாமா...?
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொள்ளை அடித்துள்ளனர். கூட்டுறவுத் துறையில் பல்வேறு இனங்களில், 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: சொன்னா பத்தாதுங்க... அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடர்ல, 'இந்த, 100 கோடி ரூபாய் முறைகேட்டுல ஈடுபட்டவர்கள் மேல என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது'ங்கிற விவரத்தைத் தாக்கல் பண்ணணும்... அப்போ தான் நீங்க உண்மையிலயே அக்கறையோட செயல்படறது நிரூபணமாகும்...!