Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நில மோசடி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பு

நில மோசடி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பு

நில மோசடி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பு

நில மோசடி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பு

ADDED : ஆக 17, 2011 03:10 AM


Google News
தாரமங்கலம் :தாரமங்கலம் அருகே நில மோசடி புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸார் மறுத்துள்ளனர். இச்சம்பவத்தில், எஸ்.பி., பரிந்துரைத்த மனுவையே போலீஸார் நிராகரித்துள்ளது, தி.மு.க., ஆதரவு போலீஸார் இன்னமும் சேலம் மாவட்டத்தில் இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த வேலாயுதசாமி கோவில் பகுதியை சேர்ந்த பாலன், இரண்டாவது முறையாக எஸ்.பி.,மயில்வாகனனிடம் கொடுத்துள்ள புகார் மனு விபரம்:

தாரமங்கலம் அடுத்த வேலாயுதசாமி கோவில் பகுதியில், என் தந்தை முத்துசாமிக்கு சொந்தமான, 1,200 சதுர அடி நிலம், நான் உள்பட என் சகோதரர்கள் அமிர்ந்தலிங்கம், ரவிச்சந்திரன், கோடீஸ்வரன் ஆகியோர் அனுபவத்தில் இருந்து வந்தது. கடந்த 2006ல், தி.மு.க.,வை சேர்ந்த கோனகாபாடி ஊராட்சி தலைவர் கந்தசாமி, அவரது உறவினர் கண்ணுப்பையன், அவரது சகோதரர் செல்லப்பன் உள்பட, 20 பேர் கும்பலமாக என் வீட்டுக்கு வந்தனர்.

எங்களுக்கு, சொந்தமான, 1,200 சதுர அடி நிலத்தை எழுதி தரும்படி மிரட்டினர். அதற்கு பதிலாக, தாரமங்கலம் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அருகில் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி, பட்டா பெற்று தருவதாக நெருக்கடி கொடுத்தனர். அதற்கு, நாங்கள் உடன்படவில்லை.

அதனால், ஆவேசமடைந்த கந்தசாமி தலைமையிலான கும்பல், எங்கள் இடத்தில் இருந்த குடிசையை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். பாதிக்கப்பட்ட நாங்கள், தாரமங்கலம் போலீஸில் புகார் செய்தோம். புகாரை பெறவே, போலீஸார் மறுத்து விட்டனர்.

அதையடுத்து, ஓமலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கில், எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகும், அத்துமீறி எங்கள் நிலத்தை ஊராட்சி தலைவர் கந்தசாமி தலைமையிலான கும்பல் அபகரித்து கொண்டது. அந்த இடத்தில், கற்சிலைகளை வைத்து கோவில் கட்டுவதாக நாடகம் ஆடுகின்றனர். தற்போது, அந்த நிலத்தின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய்.

இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி.,வசம் ஜூலை 27ல் நேரில் புகார் மனு கொடுத்தோம். இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாரமங்கலம் போலீஸாருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, கடந்த 13ந் தேதி நேரில் விசாணைக்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது.

அதன்படி, தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற எங்களிடம், மாலை வரை விசாரணை நடத்தவில்லை. இரவு 7 மணியளவில் எங்களை அழைத்து, 'தி.மு.க.,வினரை ஏன் பகைத்து கொள்கிறீர்கள். அவர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். எங்களால் எதுவும் செய்ய முடியாது' என, கூறி எஸ்.ஐ., நடராஜன் அனுப்பி வைத்து விட்டார். இதர போலீஸாரும் தி.மு.க.,வினருக்கு ஆதரவாகவே பேசினர்.

எங்களிடம், பிரச்னை குறித்து எதுவும் கேட்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு குறித்து தெரிவித்தும் போலீஸார் பொருட்படுத்தவில்லை. எனவே, தி.மு.க., வை சேர்ந்த ஊராட்சி தலைவர் உள்பட அவரது ஆதரவாளர்களுக்கு சாதகமாக செயல்படும் போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us