அரசு மாணவர் விடுதி சமையலர் இட மாற்றம்
அரசு மாணவர் விடுதி சமையலர் இட மாற்றம்
அரசு மாணவர் விடுதி சமையலர் இட மாற்றம்
ADDED : ஆக 11, 2011 11:41 PM
ஈரோடு: பணியில் கவனக்குறைவாக இருந்த வெள்ளோடு அரசு மாணவர் விடுதி சமையலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
வெள்ளோடு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில், கலெக்டர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், எடை, வகை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அன்று மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவை சுவைத்துப் பார்த்தார். உணவு சுவையாக இல்லை. அன்று, மாணவர்களுக்கு பொறியல் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுவிட்டு, பொறியல் வழங்கவில்லை, என்பது தெரியவந்தது. அங்கு சமையலராக பணி செய்த கண்ணன், விடுதி காப்பாளர் ஆகியோர் முறையாக பதில் கூறாமல் மெத்தனமாக இருந்தனர். விடுதி காப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பணியில் மெத்தனமாக இருந்த சமையலர் கண்ணன், தாளவாடி விடுதிக்கு மாற்றப்பட்டார்.
''ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் மாணவ, மாணவியர் விடுதிகளில் தரமான உணவும், அரசு அறிவித்துள்ளபடி மாணவர்களுக்கு உரிய சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும். விடுதி காப்பாளர்கள் இப்பணியை முறையாக செய்ய வேண்டும். அனைத்து விடுதிகளையும் கண்காணிக்க துறை அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதிகளை, எப்போது வேண்டுமானாலும், ஆய்வு செய்வர். விடுதி காப்பாளர், சமையலர் ஏதாவது தவறு செய்து கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என, கலெக்டர் காமராஜ் எச்சரித்தார்.