/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"டாஸ்மாக் கடைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு"டாஸ்மாக் கடைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
"டாஸ்மாக் கடைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
"டாஸ்மாக் கடைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
"டாஸ்மாக் கடைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 09, 2011 01:13 AM
திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கில்
மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ
மனுக்களை பெற்றுக் கொண்டார்.குறைதீர் முகாமில், உறையூர், பணிக்கன் தெருவை
சேர்ந்த ரெங்கராஜன் என்பவர் அளித்த மனுவில், 'உறையூர் வெக்காளியம்மன்
கோவில் அறங்காவலர் நியமிக்கும் போது, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும்,
அவர்களுக்கு வேண்டியவர்களும் நியமிக்கப்படுகின்றனர். உள்ளூர்வாசிகள்
புறக்கணிக்கப்படுகின்றனர். கோவில் வளர்ச்சிக்காக பாடுபடும் உள்ளூர்வாசிகள்
இரண்டு பேரை அறங்காவலர் குழுவில் நியமிக்க வேண்டும்' என
கூறப்பட்டுள்ளது.துறையூர், வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள்
50க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், 'வெங்கடாசலபுரம் பகுதியில் சர்வே எண்
251ல் நான்கு ஏக்கர் நிலம் அப்பகுதியில் வசித்தவர்களுக்கு இலவசமாக
வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை எங்களுக்கு பட்டா
போட்டு வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர்
பகுதியை சேர்ந்த ரஜின்சேகர் என்பவர் அளித்த மனுவில், 'எடமலைப்பட்டிபுதூர் -
கிராப்பட்டி ரயில்வே பாலம் வேலை நடக்கிறது. இதனால், அரசு மற்றும் தனியார்
பஸ்கள் சரியாக வருவதில்லை. பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் கடுமையாக
பாதிக்கப்படுகின்றனர். எனவே, மதுரை பைபாஸ் ரோடு வழியாக சுந்தரம் பிள்ளைத்
தோட்டம் ரோடு, ஆர்.எம்.எஸ்., காலனி வழியாக எடமலைபட்டிபுதூருக்கு அரசு
மற்றும் தனியார் நகர பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்
கோரியுள்ளார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் ஒன்றிய
துணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மனுவில், 'திருவெறும்பூர், வாழவந்தான்கோட்டை
கிராமத்தில் அரசு மதுபானக்கடை 'டாஸ்மாக்' திறக்கப்பட உள்ளது. அப்பகுதியில்
அதிகளவு குடியிருப்புகள், தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த மகளிர்
தொழிற்பேட்டை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், வீட்டு வசதிவாரிய
குடியிருப்பு, இலங்கை அகதிகள் குடியிருப்பு உள்ளது. தவிர, பெண்கள்
குளிக்கும் ஆயற்பாடிகுளம், விளையாட்டுதிடல், ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி, சர்ச் போன்றவை உள்ளன. எனவே, புதிதாக திறக்க
திட்டமிடப்பட்டுள்ள இந்த 'டாஸ்மாக்' கடையை அந்த இடத்தில் திறக்கக்கூடாது'
என்று கூறப்பட்டுள்ளது.சிறுகமணியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,
'நாங்கள் சிறுகமணி, திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கிறோம். ஆதிதிராவிடர்
நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை வழங்குவதாக கூறி, நில உரிமையாளருக்கு
சாதகமாக செயல்படுகின்றனர். இலவச வீட்டுமனை கோரி மனு கொடுத்தும் இதுவரை எந்த
நடவடிக்கையும் இல்லை.
மேலும், புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்ரமிப்பு
செய்துள்ளனர். ஆக்ரமிப்பை அகற்றி பொதுமக்களுக்கு மீண்டும் கிடைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.அகில இந்திய
அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் அளித்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு யாரும் வாடகை
வீடு கூட தரமறுக்கின்றனர். வேலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கரூர்,
பெரம்பலூர் உள்பட பல மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்
பட்டா வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மணிகண்டம் யூனியன் கொளுக்கட்டைகுடி
கிராமத்தில் ஒரு 'சென்ட்' இடம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஊர் மக்கள்
எங்களை விரட்டியடித்தனர். அதன்பின், பத்து ஆண்டாக எங்களுக்கு இலவச
வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, விரைவில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, உரிய இடத்தை
ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


