/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தொழில் கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்தொழில் கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தொழில் கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தொழில் கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தொழில் கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 06, 2011 02:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் துவங்க கடன் பெறுதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் டான்சி வளாகத்தில் நடந்தது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஏகம்பவாணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் அனைத்த மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளாக அந்த பகுதியில் வசிக்க வேண்டும். தேசிய வங்கி, நிதி நிறுவனம், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளவராக இருக்க கூடாது. அரசு மானியத்துடன் கூடிய பிற கடன் உதவி பெற்றவர்களாக இருத்தல் கூடாது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி பிரிவினருக்கு அதிகபட்சம் 5 லட்ச ரூபாயும், சேவை பிரிவினருக்கு 3 லட்ச ரூபாயும், வியாபார பிரிவினருக்கு ஒரு லட்ச ரூபாயும் கடன் வழங்கப்படும். கடன் பெற விரும்புவோர் பொது பிரிவினர்கள் திட்ட மதிப்பில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும். பட்டியல் வகுப்பு, பழங்குடியினர், பி.சி. மற்றும் எம்.பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படைவீரர், மாற்றுதிறன் படைத்தவர்கள், திருநங்கையர் ஆகியோர் சிறப்பு பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 15 சதவீதம் மானியமாக பெற முடியும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தொழில் மையத்தில் பெற்று அளிக்கலாம். திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்த சந்தேகங்களை மாவட்ட தொழில் மையத்திலும், தொழிற்சாலைகள் சங்த்திலும் அனுகி தெரிந்து கொள்ளலாம். தகுதியானவர்கள் மானியத்துடனான இந்த கடனுதவியை பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் அரசு, உதவி பொறியாளர் பிரசன்னா பாலமுருகன் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.